விஜய் ஹசாரே டிராபி தொடர்ச்சியாக 9வது வெற்றியுடன் சி பிரிவில் தமிழகம் முதலிடம்: 78 ரன் வித்தியாசதில் குஜராத்தை வீழ்த்தியது

தினகரன்  தினகரன்
விஜய் ஹசாரே டிராபி தொடர்ச்சியாக 9வது வெற்றியுடன் சி பிரிவில் தமிழகம் முதலிடம்: 78 ரன் வித்தியாசதில் குஜராத்தை வீழ்த்தியது

ஜெய்பூர்: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் சி பிரிவில் குஜராத் அணியை 78 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ச்சியாக 9வது வெற்றியை பதிவு செய்த தமிழக அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. சி பிரிவில் மொத்தம் 10 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை லீக் சுற்றில் மோதிய நிலையில் தமிழகம், குஜராத் அணிகள் 8 லீக் ஆட்டத்தில் தொடர்ச்சியாக வென்று தலா 32 புள்ளிகளுடன் முன்னிலை வகித்தன. மொத்த ரன் ரேட் அடிப்படையில் தமிழக அணி (1.908) முதலிடத்திலும், குஜராத் (1.666) 2வது இடத்திலும் இருக்க, கடைசி லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது.ஜெய்பூரியா வித்யாலயா மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசியது. தமிழக அணி தொடக்க வீரர்களாக அபினவ் முகுந்த், முரளி விஜய் களமிறங்கினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 21.4 ஓவரில் 130 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். முகுந்த் 79 ரன் (68 பந்து, 13 பவுண்டரி) விளாசி சாவ்லா சுழலில் விக்கெட் கீப்பர் பார்திவ் பட்டேல் வசம் பிடிபட்டார். அடுத்து முரளி விஜய் - வாஷிங்டன் சுந்தர் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 82 ரன் சேர்த்தது. சதத்தை நெருங்கிய நிலையில், முரளி விஜய் 94 ரன் எடுத்து (106 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) துரதிர்ஷ்டவசமாக விக்கெட்டை இழந்தார். கேப்டன் தினேஷ் கார்த்திக் முதல் பந்திலேயே ரன் அவுட்டாகி வெளியேற, சுந்தர் 42 ரன் (65 பந்து, 2 பவுண்டரி), விஜய் ஷங்கர் 23, அபராஜித் 25 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.கடைசி கட்டத்தில் ஷாருக் கான் (1), முகமது (1), முருகன் அஷ்வின் (2) சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். தமிழக அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 274 ரன் குவித்தது. சாய் கிஷோர் (1), நடராஜன் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் பந்துவீச்சில் ரூஷ் களரியா, அர்ஸன் நக்வஸ்வல்லா தலா 3, பியுஷ் சாவ்லா 2 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 275 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் பார்திவ் பட்டேல் 6 ரன், பிரியங்க் பாஞ்ச்சால் 12 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். மன்பிரீத் ஜுனேஜா 24, பார்கவ் மெராய் 44 ரன் எடுத்து ஆட்டமிழக்க, ருஜுல் பட் 5 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த வீரர்களில் அக்சர் பட்டேல் 55 ரன் (55 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாச, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் பெவிலியன் திரும்பினர்.குஜராத் அணி 42.2 ஓவரில் 196 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. தேஜஸ் பட்டேல் 24 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தமிழக அணி பந்துவீச்சில் முகமது 3, எம்.அஷ்வின் 2, அபராஜித், சாய் கிஷோர், விஜய் ஷங்கர், நடராஜன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 78 ரன் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி தொடர்ச்சியாக 9வது வெற்றியை பதிவு செய்த தமிழகம் 36 புள்ளிகளுடன் சி பிரிவில் முதலிடம் பிடித்து கால் இறுதிக்கு முன்னேறியது.

மூலக்கதை