அமெரிக்காவில் இந்தியர் பயங்கரம் சார்.. 4 கொலை பண்ணிட்டேன்...: காரில் சடலத்துடன் சென்று போலீசில் சரண்

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் இந்தியர் பயங்கரம் சார்.. 4 கொலை பண்ணிட்டேன்...: காரில் சடலத்துடன் சென்று போலீசில் சரண்

சான் பிரான்சிஸ்கோ:  அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் 4 கொலைகளை செய்துவிட்டு சடலத்தோடு காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.  அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள மவுன்ட் சாஷ்டா காவல் நிலையத்துக்கு கடந்த திங்களன்று விலையுயர்ந்த காரில் ஒரு டிப்டாப் ஆசாமி வந்துள்ளார். காரில் இருந்து இறங்கி காவல் நிலையத்துக்கு வந்த அந்த நபர், போலீஸ் அதிகாரியிடம், சார் நான் 4 கொலை பண்ணிட்டேன், பாடி என்னோட கார்ல இருக்கு என்று கூறியுள்ளார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நபர் பார்ப்பதற்கு மிகவும் நாகரீகமாக இருந்ததால் இதனை நம்ப முடியாத போலீசார் வெளியே சென்று காரில் சோதனை செய்துள்ளனர். அப்போது காரில் ஒருவரது சடலம் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த நபரிடம் சென்ற போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். ரோஸ்வில்லி பகுதியை சேர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த அவரது பெயர் சங்கர் நாகப்பா ஹங்கட் என்பது தெரியவந்தது. அவர் தகவல் தொழில்நுட்ப நிபுணர் என்பதும்,  சாக்ரமேன்டோ பகுதியில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றியதும் தெரியவந்தது. போலீசார் விசாரணையில் அவர் மேலும் 3 பேரை கொன்றுள்ளதாகவும் சடலங்கள் தனது குடியிருப்பில் உள்ளதாகவும் ஹங்கட் கூறியுள்ளார். அவர் குறிப்பிட்ட குடியிருப்பு சுமார் 350 கி.மீ. தொலைவில் உள்ளது. எனினும், உடனடியாக போலீசார் அவரை அழைத்து கொண்டு சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு அவரது குடியிருப்பில் 3 பேர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். சடலங்களை போலீசார் கைப்பற்றினார்கள். பின்னர் அன்றிரவு அவர் சிஸ்கியோ கவுன்டியில் இருந்து திரும்ப அழைத்து வரப்பட்டார். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவரை தெற்கு பிலேசர் சிறையில் அடைத்தனர். கொலை செய்யப்பட்டவர்களில் 2 பேர் பெரியவர்கள், 2 பேர் சிறுவர்கள். கொலை செய்யப்பட்டவர்கள் ஹங்கட் குடும்ப உறுப்பினர்கள் என தெரிகிறது. ஒரு சில நாட்கள் இடைவெளியில் அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்டோரின் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

மூலக்கதை