காஷ்மீரில் தலைவர்கள் கைது ஏன்?: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

தினமலர்  தினமலர்
காஷ்மீரில் தலைவர்கள் கைது ஏன்?: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், அரசியல் தலைவர்களை கைது செய்வதற்கும், தகவல் தொடர்புகளை முடக்கி வைக்கவும் பிறப்பித்துள்ள உத்தரவுகளை தாக்கல் செய்யும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, ஆக., 5ல் நீக்கப்பட்டது. அதையடுத்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரிவினைவாதத் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறுஞ்செய்தி



முன்னாள் முதல்வர்களான, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர், பரூக் அப்துல்லா, அவருடைய மகன், ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர், மெஹபூபா முப்தி உள்ளிட்டோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.காஷ்மீரில், 72 நாட்களாக முடக்கப்பட்டிருந்த, மொபைல் போன் சேவை, சமீபத்தில் மீண்டும் துவக்கப்பட்டது.

ஆனால், எஸ்.எம்.எஸ்., எனப்படும், மொபைல் போன் குறுஞ்செய்தி அனுப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து, பல்வேறு வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இவற்றை, நீதிபதி, என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

நேற்று, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் கூறியதாவது:காஷ்மீரில், அரசியல் தலைவர்கள் கைது செய்வதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் மற்றும் எந்த அடிப்படையில் தகவல் தொடர்பு சேவைகள் முடக்கப்பட்டன என்பதற்கான உத்தரவுகளை, மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு மத்திய அரசு தாக்கல் செய்யாவிட்டால், தாக்கல் செய்யும்படி மீண்டும் வலியுறுத்த மாட்டோம். அது இல்லாமலேயே, அடுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.

கண்டனம்

அதைத் தொடர்ந்து, 'நீதிமன்றத்தின் பார்வைக்காக மட்டும் அந்த ஆவணங்களை தாக்கல் செய்யத் தயாராக உள்ளோம்' என, ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம் சார்பில் ஆஜரான, சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா தெரிவித்தார்.இதற்கிடையே, மலேஷியாவைச் சேர்ந்த, வெளிநாட்டு வாழ் இந்தியரான தன் கணவர் முபீன் அஹமது ஷாவை கைது செய்துள்ளதை எதிர்த்து, அவருடைய மனைவி வழக்கு தொடர்ந்துள்ளார்.இது தொடர்பாகஜம்மு - காஷ்மீர் நிர்வாகம் பதிலளிக்காததற்கு, நீதிபதி என்.வி.ரமணா அமர்வு கண்டனம் தெரிவித்தது.

3 பயங்கரவாதிகள் கொலை



காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில், ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை, பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில், மூன்று பயங்கரவாதிகளை, பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

வியாபாரி சுட்டுக் கொலை



புல்வாமா மாவட்டத்தில், சத்தீஸ்கரைச் சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளர் ஒருவரை, பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். கடந்த மூன்று நாட்களில் நடந்த இரண்டாவது சம்பவம் இது. சோபியான் மாவட்டத்தில், ராஜஸ்தானைச் சேர்ந்த டிரக் டிரைவரை, பயங்கரவாதிகள் இரு தினங்களுக்கு முன்பு சுட்டுக் கொன்றனர்.

பயங்கரவாதி கைது



ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின், ஸ்ரீநகரின் சவுரா பகுதியில், ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டது.வன்முறையை தூண்டி விட்டதுடன், அதற்கு மூளையாகச் செயல்பட்டதாக, ஹயாத் அகமது பட் என்ற பயங்கரவாதியை, போலீசார் கைது செய்தனர்.

வீட்டுக் காவலில் பரூக்



தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, ஸ்ரீநகரில் உள்ள அவருடைய வீட்டில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டதாக, அவருடைய மகள் சபியா, நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை