மன்மோகன், ரகுராம் ராஜன் : நிர்மலா சீதாராமன் பகிரங்க புகார்

தினமலர்  தினமலர்
மன்மோகன், ரகுராம் ராஜன் : நிர்மலா சீதாராமன் பகிரங்க புகார்

நியூயார்க்:''முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போது ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜன் காலம்தான், பொதுத் துறை வங்கிகளின் மிகவும் மோசமான காலகட்டம்,'' என, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன் பகிரங்கமாக புகார் கூறினார்.

கடன்கள் தாராளம்



ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த, ரகுராம் ராஜன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், 'இந்தியாவில் அனைத்து அதிகாரங்களும் ஒரே இடத்தில் குவிந்திருக்கிறது.'அந்த தலைமைக்கு பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க என்ன செய்வது என்பதற்கான, நிலையான ஒருங்கிணைத்த தொலைநோக்கு பார்வை இல்லை' என்று கூறினார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கொலம்பியா பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:மிகச் சிறந்த சிந்தனையாளர், கல்வியாளர் என்ற வகையில், ரகுராம் ராஜனை பெரிதும் மதிக்கிறேன்.

இந்தியப் பொருளாதாரம் மிகவும் சிறப்பாக இருந்த காலத்தில், அவர் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் தான், தொலைபேசி மூலம், குட்டிக் குட்டி அரசியல்வாதிகள் கூறியதை எல்லாம் கேட்டு, வங்கிகள், கடன்களை தாராளமாக அளித்தன.

கிண்டல் செய்யவில்லை



அவ்வாறு சிந்தனையில்லாமல் அளிக்கப்பட்ட கடன்களே, வாராக் கடன்களாக மாறி, தற்போது வங்கிகள் திணறும் அளவுக்கு வந்துள்ளன.அவர்கள் செய்த தவறை, நாங்கள் சரி செய்து வருகிறோம்.ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தபோது, டாக்டர் மன்மோகன் சிங், பிரதமராக இருந்தார். நிலையான ஒருங்கிணைந்த பார்வை, மன்மோகன் சிங்குக்கு இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.நான் யாரையும் கிண்டல் செய்யவில்லை. அவர்கள் கூறியதற்கு பதில் அளிக்கிறேன்.

பிரதமருக்கு அதிகாரம்



அவர்கள் மீது எனக்கு நிறைய மரியாதை உண்டு. ஆனால், மன்மோகன் சிங், ரகுராம் ராஜன் காலம் தான், பொதுத் துறை வங்கிகளின் மிகவும் மோசமான காலகட்டம்.தற்போது அனைத்து அதிகாரங்களும் ஓர் இடத்தில் இருப்பதாகக் கூறுகின்றனர்.

காங்கிரஸ் ஆட்சியின் போது, அதிகாரங்கள் பரவலாக இருந்ததால் தான், பல்வேறு துறைகளிலும் ஊழல்கள், மோசடிகள் நடந்தன. தற்போது அனைத்தை யும் திட்டமிட்டு, ஒருங்கிணைந்து செயல்படுத்துகிறோம். அமைச்சரவையில் மற்றவர்களைவிட, பிரதமருக்கு அதிக அதிகாரம் உள்ளது. அது தவறில்லையே.இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய கலாசாரம்



கொலம்பியா பல்கலையில் நிகழ்த்திய உரையில், நிர்மலா சீதாரமன் மேலும் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பெண்களுக்கு பல்வேறு அதிகாரங்கள் மறுக்கப்பட்டிருந்தன. இது தான் மிகப் பெரிய மனித உரிமை மீறல். ஆனால், இத்தனை ஆண்டுகளாக இது குறித்து யாரும் பேசவில்லை. ஆனால், சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பிறகு, அங்கு மனித உரிமை மீறப்படுவதாக கூறுகின்றனர். மனித உரிமை மீறல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது, புதிய கலாசாரமாக மாறிஉள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை