ஜப்பானை தாக்கிய ஹஜிபிஸ் புயல்: பலி எண்ணிக்கை 74 ஆக உயர்வு... பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க முதல் கட்டமாக 6.5 டாலர் நிதி ஒதுக்கீடு

தினகரன்  தினகரன்
ஜப்பானை தாக்கிய ஹஜிபிஸ் புயல்: பலி எண்ணிக்கை 74 ஆக உயர்வு... பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க முதல் கட்டமாக 6.5 டாலர் நிதி ஒதுக்கீடு

டோக்கியோ: ஜப்பானில் ஹஜிபிஸ் புயல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் சுற்றுப் பகுதிகளை ஹஜிபிஸ் புயல் கடந்த சனிக்கிழமை கடுமையாக தாக்கியது. இதனால், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததில், சிகுமா, தாமா உள்ளிட்ட 14 ஆறுகளில் நீர் அபாயக் கட்டத்தை தாண்டி ஓடுகிறது. வெள்ளப் பெருக்கினால் 14,000க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் மூழ்கின. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால், மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். புயல் காரணமாக 5 லட்சம் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், பல பகுதிகளில் 100-க்கும் அதிகமான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. தற்போது புயல் கரையை கடந்துவிட்டதால் மீட்புப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தீயணைப்பு படையினர்,  ராணுவத்தினர், பேரிடர் மீட்பு குழுவினர் என 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஹெலிகாப்டர், படகு மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஹகிபிஸ் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 212 பேர் படுகாயமடைந்துள்ளனர். காணமல் போன 11 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்சோ அபே புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க முதல் கட்டமாக 6.5 டாலர்களை நிதியாக ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை