‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ மதிப்பு இரண்டே ஆண்டுகளில் எகிறும்

தினமலர்  தினமலர்
‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ மதிப்பு இரண்டே ஆண்டுகளில் எகிறும்

புதுடில்லி: இன்னும் இரண்டே ஆண்டுகளில், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம், 14.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட, முதல் இந்திய நிறுவனமாக உருவெடுக்கும் என, ‘பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லிஞ்ச்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு, 8.7 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது, 14.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ளதாக மாற, அதன் புதிய வர்த்தக முயற்சிகள் கைகொடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக, சிறு கடைகளில், ‘டிஜிட்டல்’ பணப் பரிவர்த்தனைக்கான, எம்., – பி.ஓ.எஸ்., சேவையை வழங்குவது அதிகரிக்கும்.

மேலும், ‘மைக்ரோசாப்ட்’ துணையுடன், சிறிய நடுத்தர நிறுவனங்கள் பிரிவில் நுழைவது, ‘ஜியோ பைபர் பிராட்பேண்டு’ விளம்பரங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் முயற்சிகள் ஆகியவற்றின் மூலம் இந்நிலையை எட்டலாம்.நிறுவனம் வளர்ச்சி பெறும் நிலையில், ஜியோ மொபைல் வைத்திருக்கும் ஒரு நபரால் தற்போது கிடைக்கும், 151 ரூபாய், 2021 – 2022ம் நிதியாண்டில், 177 ரூபாயாக அதிகரிக்கும்.

மேலும், 10 லட்சம் சிறிய கடைகள் எம்., – பி.ஓ.எஸ். வகைக்காக ஒவ்வொன்றும் மாதம், 750 ரூபாய் வழங்கும். 1.20 கோடி பேரின் பிராட்பேண்டு இணைப்பு மூலம், ஒரு நபருக்கு மாதம், 840 ரூபாய் கட்டணம் கிடைக்கும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை