‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள்: ரத்தன் டாடா வியப்பு

தினமலர்  தினமலர்
‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள்: ரத்தன் டாடா வியப்பு

மும்பை: டாடா குழுமத்தின் ஓய்வுபெற்ற தலைவரான ரத்தன் டாடா, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களில் முதலீடு செய்யும் நபராக தான் மாறியது, ஒரு விபத்து போன்றது தான் என தெரிவித்துள்ளார்.

ரத்தன் டாடா இதுவரை, 12க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:நான் டாடா குழுமத்தில் இருந்தபோது, ஸ்டார்ட் அப் நிறுவனங்களை பார்க்கும்போது ஆச்சரியப்படுவேன். ஆனால், டாடா குழுமத்தின் பார்வை வேறு திசையில் இருந்தது.நான் ஓய்வுபெற்ற பின், என் சொந்த பணத்திலிருந்து சிறிய அளவில் முதலீடு செய்தேன்.இரண்டு, மூன்று ஆண்டுகளில் இத்துறை மிகவும் சிறப்பான சிந்தனைகளையும், துடிப்பாற்றலையும் கொண்டிருந்ததை அறிந்து கொண்டேன்.

பொதுவாக எல்லாரும் கருதும் அளவுக்கு எல்லாம் என்னிடம் பணம் கிடையாது. முதலீடு செய்வதற்கு உரிய ஒரு நிறுவனத்தை, நான் என் உள்ளுணர்வின் மூலமே முடிவு செய்கிறேன். இன்னும் சொல்வதென்றால், மற்ற எல்லாவற்றையும் விட நிறுவனர்களுடன் பேசும் போது, அவர்களது நடத்தை, முதிர்ச்சி, தீவிரம் ஆகியவற்றை வைத்தே முடிவுக்கு வருகிறேன்.

தொழில் நுட்ப துறை, ஆரோக்கிய பாதுகாப்பு, மருத்துவ சிகிச்சை, ஆன்லைன் மற்றும் தயாரிப்பு ஆகிய துறைகளில், முதலீட்டுக்கான வாய்ப்புகள் உள்ளன.மனதளவில் இந்தியர்கள் அனைவருமே தொழில்முனைவோர்கள் தான். நமக்கு தேவைப்படுவது செழிப்பதற்கான வாய்ப்பு மட்டுமே.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை