'மாஜி' மந்திரி சிதம்பரம் மீண்டும் கைது: சி.பி.ஐ.,யைத் தொடர்ந்து அமலாக்கத் துறை அதிரடி

தினமலர்  தினமலர்
மாஜி மந்திரி சிதம்பரம் மீண்டும் கைது: சி.பி.ஐ.,யைத் தொடர்ந்து அமலாக்கத் துறை அதிரடி

புதுடில்லி:ஐ.என்.எக்ஸ்., மீடியா ஊழல் வழக்கில், காங்கிரசைச் சேர்ந்த, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், மீண்டும் கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ.,யைத் தொடர்ந்து, அமலாக்கத் துறையும் அதிரடியாக, திஹார் சிறையில் நேற்று அவரை கைது செய்தது.

முந்தைய காங்., ஆட்சியின்போது, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், 305 கோடி ரூபாய் அன்னிய முதலீடு பெறுவதற்கு அனுமதி கோரியது. கடந்த, 2007ல், அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த, காங்., மூத்த தலைவர் சிதம்பரம், இதற்கான அனுமதியை அளித்தார்.

பல கோடி ரூபாய் ஊழல்சிதம்பரத்தின் மகன், கார்த்தியின் தலையீட்டில், எப்.ஐ.பி.பி., எனப்படும், அன்னிய நேரடி முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம், இதற்கான அனுமதியை அளித்தது. இதில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததுடன், பிரதிபலனாக, சிதம்பரம் குடும்பத்தாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.இது தொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் இந்த விவகாரத்தில் நடந்த பண மோசடி குறித்து, அமலாக்கத் துறையும் விசாரித்து வருகின்றன.

சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில், சிதம்பரம், ஆக., 21ல், டில்லியில் அதிரடியாக கைது செய்யப் பட்டார். சி.பி.ஐ., காவலில் எடுத்து அவரை விசாரித்தது. அதன் பின், நீதிமன்றக் காவலில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த, 55 நாட்களாக, சி.பி.ஐ., மற்றும் நீதிமன்றக் காவலில் அவர் இருந்து வருகிறார்.இந்த நிலையில், இந்த விவகாரத்தில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

டில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், 'சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்' என, அமலாக்கத் துறை நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்திருந்தது. 'சிதம்பரத்தை திஹார் சிறையில் விசாரிக்கலாம்; அதன்பிறகு தேவைப்பட்டால், கைது செய்யலாம்' என, சிறப்பு நீதிமன்றம் கூறியிருந்தது.அதன்படி, நேற்று காலை, 8:15 மணிக்கு, திஹார் சிறைக்கு, அமலாக்கத் துறையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் சென்றனர்.

சிதம்பரத்திடம், இரண்டு மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, அவரை கைது செய்தனர்.இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, அவருடைய மகன் கார்த்தி மற்றும் சிதம்பரத்தின் மனைவி நளினி ஆகியோர், சிறை வளாகத்தில் அப்போது இருந்தனர்.

ஆஜர்படுத்த உத்தரவுசிதம்பரத்தை கைது செய்த அமலாக்கத் துறை, டில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், '14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தது. சி.பி.ஐ., வழக்கில் சிதம்பரம் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டு்ள்ளதால் அவரை ஆஜர் படுத்தும் வகையில் வாரண்ட் பிறப்பித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.கார்த்தியும் விரைவில் கைது?'

ஏர்செல் - மேக்ஸிஸ்' வழக்கில், சிதம்பரம் மகன் கார்த்தி விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.

சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக, 2006ல் பதவி வகித்த போது, ஏர்செல் - மேக்ஸிஸ் நிறுவனங்களின் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு உள்ளது. மேக்ஸிஸ் நிறுவனத்தின் முதலீடுக்கு, எப்.ஐ.பி.பி., எனப்படும், அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி அளித்தது. இது போன்ற அனுமதியை, பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி அளிக்க வேண்டும். ஆனால், இந்த விதிமுறையை மீறி, நிதியமைச்சர் என்ற முறையில், சிதம்பரம் அனுமதி அளித்ததாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்த வழக்கில், பண மோசடி குறித்து, அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதில், சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தியின் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கில், சிதம்பரம் மற்றும் கார்த்திக்கு வழங்கப்பட்டுள்ள முன்ஜாமினை ரத்து செய்யக் கோரி, கடந்த, 10ம் தேதி, டில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. இதன் மீதான உத்தரவு, நவ., 29ல் விசாரணைக்கு வருகிறது. முன்ஜாமின் ரத்து செய்யப்பட்டால், கார்த்தி உடனடியாக கைது செய்யப்படுவார் என தெரிகிறது.

விரைவில் குற்றப்பத்திரிகை
ஐ.என்.எக்ஸ்., மீடியா ஊழல் வழக்கில், குற்றப் பத்திரிகையை, சி.பி.ஐ., தாக்கல் செய்ய உள்ளது.
ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்தின் உரிமையாளர்களான, பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜி தற்போது சிறையில் உள்ளனர். தன் மகளை கொலை செய்த வழக்கில், இந்திராணி கைது செய்யப்பட்டார். அவருடைய மூன்றாவது கணவர், பீட்டர் முகர்ஜியும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், இந்திராணி, 'அப்ரூவராக' மாறினார். 'ஐ.என்.எக்ஸ்., மீடியா
நிறுவனத்துக்கு அன்னிய முதலீடு பெறுவது தொடர்பாக, சிதம்பரத்தையும், கார்த்தியையும்
சந்தித்தோம்' என, இந்திராணி வாக்குமூலம் அளித்திருந்தார்.

கடந்த, 2017, மே 15ல், சி.பி.ஐ., இந்த வழக்கை பதிவு செய்தது. விரைவில் குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்ய உள்ளது. அதில், சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி மற்றும் சில முன்னாள், இந்நாள் அரசு அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெறும் என, எதிர்பர்க்கப்படுகிறது.

ஜாமினுக்கு எதிர்ப்புஐ.என்.எக்ஸ்., மீடியா ஊழல் தொடர்பாக, சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில், ஜாமின் கேட்டு, சிதம்பரம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை, நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது.

நேற்று நடந்த விசாரணையின்போது, 'பல்வேறு சாட்சிகளுக்கு சிதம்பரம் நெருக்கடி கொடுத்து உள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அவரை ஜாமினில் விடுவித்தால்,
சாட்சிகளுக்கு அதிக நெருக்கடி ஏற்படும்' என, சி.பி.ஐ., சார்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ் வாதிட்டார்.

மூலக்கதை