வலுவான நிலையில் பொருளாதாரம் தலைமை ஆலோசகர் சுப்ரமணியன் அறிவிப்பு

தினமலர்  தினமலர்
வலுவான நிலையில் பொருளாதாரம் தலைமை ஆலோசகர் சுப்ரமணியன் அறிவிப்பு

புதுடில்லி, அக். 17-நாட்டின் பொருளாதாரத்துக்கான அடிப்படைகள், மிக மிக வலுவாக இருப்பதாக, தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

நேற்று, 'பிக்கி' அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் பங்கேற்று, புதிய முதலீடுகளை துவங்க தொழில் துறைக்கு அழைப்பு விடுத்த, சுப்ரமணியன், நாட்டின் பொருளாதார அடிப்படைகள் மிகவும் வலுவாக இருப்பதாக தெரிவித்தார்.இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான பணக் கடன்களை தீர்ப்பதில், பெரிய நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

சிறு நிறுவனங்களுக்கான நிலுவைத் தொகை, 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இருக்கிறது. சிறு நிறுவனங்கள் பணப் புழக்கத்தை சார்ந்து இருப்பதால், பெரு நிறுவனங்கள் நிலுவைத் தொகைகளை உரிய நேரத்தில் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.பொருளாதார வளர்ச்சிக்கு முதலீடுகள் மிக முக்கியம். நாட்டின் பொருளாதார மந்த நிலைக்கு முதலீடுகள் குறைவது, முக்கியமான காரணமாக இருக்கிறது.

பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் போது, தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்துக்கு கிடைப்பர் என்பதை பெரு நிறுவனங்கள் மனதில் கொள்ள வேண்டும். எனவே, இது முதலீடுகள் செய்யும் நேரம். மேலும், இந்த கூடுதல் முதலீட்டை, நீண்ட கால நோக்கில் செய்ய வேண்டும்.பொருளாதார பிரச்னைகளை சரி செய்வதில் அரசு மிகவும் துடிப்புடன் உள்ளது. நாட்டின் பொருளாதார அடிப்படைகள் வலுவாக உள்ளன; அவை மாறவில்லை. தற்போது பொருளாதார வளர்ச்சி மீண்டும், 7 முதல், 8 சதவீதமாக உயரும் நிலையில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.40,000 கோடி



நிறுவனங்கள் விவகார அமைச்சகத்திற்கு, பெரு நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள அறிக்கைகளின் மூலம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிலுவைத் தொகை இருப்பது தெரிய வந்துள்ளதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.

கணிப்புகள்



இந்திய ரிசர்வ் வங்கி



நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி, 6.9 சதவீதமாக இருக்கும் என்று முன்னர் சொன்னதை மாற்றி, 6.1 சதவீதமாக இருக்கும்.


பன்னாட்டு நிதியம்



நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி, 6.1 சதவீதமாக இருக்கும்.



உலக வங்கி



நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில், 6 சதவீதமாக இருக்கும்.

மூலக்கதை