பொருளாதார மந்த நிலையால் ஏற்றுமதி, இறக்குமதி செப்டம்பரில் குறைந்தது: தங்கம் இறக்குமதி 50% சரிவு

தினகரன்  தினகரன்
பொருளாதார மந்த நிலையால் ஏற்றுமதி, இறக்குமதி செப்டம்பரில் குறைந்தது: தங்கம் இறக்குமதி 50% சரிவு

புதுடெல்லி: நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி கடந்த 3 ஆண்டில் இல்லாத அளவுக்கு கடந்த செப்டம்பரில் சரிவை சந்தித்துள்ளது. தங்கம் இறக்குமதி 50 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் ஏற்றுமதி 6.57 சதவீதம் குறைந்து 2,600 கோடி டாலராகவும், இறக்குமதி 13.9 சதவீதம் சரிந்து 3,690 கோடி டாலராகவும் உள்ளது என வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. இதன் பலனாக வர்த்தக பற்றாக்குறையும் 1,090 கோடி டாலராக குறைந்துள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு முக்கியமாக 30 பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுகின்றன. இவற்றில் ஏற்றுமதியில் 22 பொருட்களும், இறக்குமதியில் 25 பொருட்களும் சரிவை சந்தித்துள்ளன. ஏற்றுமதியை பொறுத்தவரை நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் (5.56%), ரசாயனங்கள் (3.5%), இன்ஜினியரிங் பொருட்கள் (6.2%), ரெடிமேட் ஆடைகள் (2.2%), பெட்ரோலிய பொருட்கள் (18.6%) சரிந்துள்ளன. மருந்து பொரட்கள் ஏற்றுமதி மட்டும் 8.7 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுபோல் இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் நிலக்கரி (24%), பெட்ரோலியம் (18.3%), ரசாயனம் (16.2%), பிளாஸ்டிக் பொருட்கள் (10.7%), ராசிக்கற்கள் (17.3%), இரும்பு மற்றும் ஸ்டீல் (14.6%), எலக்ட்ரானிக் பொருட்கள் (0.14%) தங்கம் (50.8%) சரிந்துள்ளது.

மூலக்கதை