வாகன விற்பனை சரிவால் வார்பட தொழில் கடும் பாதிப்பு

தினகரன்  தினகரன்
வாகன விற்பனை சரிவால் வார்பட தொழில் கடும் பாதிப்பு

புதுடெல்லி: வாகன விற்பனை சரிவு காரணமாக, வார்பட உற்பத்தி தொழில்துறை கடும் பாதிப்பை அடைந்துள்ளது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியை அடுத்து ஆட்டோமொபைல் துறை பாதிக்கப்பட்டு வருகிறது. விற்பனை சரிவால் டீலர்கள், ஆட்டோமொபைல் உதிரிபாக தயாரிப்பை சார்ந்த பல தொழிலாளர்கள் வேலை இழந்தனர். சுமார் 3.5 லட்சத்துக்கு மேல் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் துறையை நம்பியுள்ள துறைகளில் வார்பட தொழிலும் ஒன்று. ஆண்டுக்கு 12 மில்லியன் டன் வார்ப்படங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் 45 முதல் 50 சதவீதம் ஆர்டர்கள் ஆட்டோமொபைல் துறை சார்ந்தவை. எனவே, வாகன விற்பனை சரிவால் வார்ப்பட உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக வார்ப்பட தொழில்துறை ஆண்டுக்கு சராசரியாக 15 சதவீதம் வளர்ச்சி பெற்று வந்தது. இதன்மூலம் 20 லட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்றனர். ஆனால், வாகன விற்பனை சரிவால் இந்த ஆண்டு சரிவை சந்தித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் பிஎஸ் 6 இன்ஜின் பொருத்திய கார்கள் விற்பனைக்கு வருவதால், இதில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. கடந்த ஜூலை முதல் நடப்பு மாதம் வரை மட்டும் வார்பட உற்பத்தி 10 சதவீதம் சரிந்து விட்டது. கனரக வாகன உதிரி பாகங்களை பொறுத்தவரை, இத்துறையின் பங்களிப்பு 10 முதல் 15 சதவீதமாகவும், எண்ணெய் உற்பத்தி துறை மூலம் 5 சதவீதம் முதல் 10 சதவீதமாகவும் உள்ளது. ஆட்டோமொபைல் துறை பின்னடைவால் 50 சதவீத உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், ரயில்வே, டிராக்டர்கள், பம்ப், விவசாய துறை தேவைகளுக்காக பாதி உற்பத்தி மட்டுமே நடக்கிறது. அதிலும் மாதத்தில் 15 நாள்தான் இயக்கப்படுகிறது என வார்ப்பட தொழில்துறையினர் வேதனையுடன் தெரிவித்தனர்.

மூலக்கதை