சிறு நிறுவனங்கள் வாங்கிய கடன்களை மறுசீரமைப்பு! வங்கியாளருக்கு ஏ.இ.பி.சி., வலியுறுத்தல்

தினமலர்  தினமலர்
சிறு நிறுவனங்கள் வாங்கிய கடன்களை மறுசீரமைப்பு! வங்கியாளருக்கு ஏ.இ.பி.சி., வலியுறுத்தல்

திருப்பூர்:சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கோரிக்கையை பரிசீலித்து, வங்கி கடன்களை மறுசீரமைப்பு செய்து கொடுக்க வேண்டுமென, ஏ.இ.பி.சி., தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.ஆயத்த ஆடை மேம்பாட்டு கவுன்சில் தலைவர் (பொறுப்பு) சக்திவேல், அனைத்து வங்கிகளின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்களுக்கு, அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:நாட்டின் ஜவுளி ஏற்றுமதியில், 50 சதவீதம் அளவுக்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி முக்கிய பங்காற்று கிறது. இதன்மூலம், ஆண்டுக்கு, 1.13 லட்சம் கோடி ரூபாய் நாட்டுக்கு அன்னிய செலாவணி கிடைக்கிறது. அதிக அளவிலான துணி ஏற்றுமதி செய்யப்படுகிறது.பின்னலாடை ஆயத்த ஆடை தொழில்கள் வாயிலாக, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். குறிப்பாக, 60 முதல், 70 சதவீத பெண் தொழிலாளர்களும் இத்தொழிலால் பயன்பெறுகின்றனர்.ஜவுளித்தொழிலில் 80 சதவீத நிறுவனங்கள் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களாக உள்ளன. சிறு, குறு நிறுவனங்கள், கடன் வாங்க, தங்களுடைய சொத்துக்களை அடமானம் வைத்துள்ளனர்.
தொழில் நிலை சரியில்லாததால், கடனை முறையாக செலுத்த இயலாத சூழல் நிலவுகிறது.கோரிக்கையை ஏற்று, மத்திய நிதி அமைச்சர், வங்கி கடனை மறுசீரமைப்பு செய்து உதவுமாறு தெரிவித்துள்ளார்.வரும் மார்ச் 2020 வரை, எந்த நிறுவனத்தையும், கடனாளிகள் பட்டியலில் சேர்க்காமல் உதவ வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நிறுவனங்கள், இந்திய ஆடை உற்பத்தியாளரை நோக்கி வரத்துவங்கியுள்ளன. எனவே, தொழில்துறையினர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தொழிலை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின், வங்கி கடன்களை மறுசீரமைப்பு செய்து கொடுக்கவும், வங்கி கிளைகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும். 'ரெப்போ ரேட்' குறைப்பால் ஏற்படும் நன்மைகளை வாடிக்கையாளருக்கு பகிர்ந்து அளிக்க, வங்கிகள் முன்வர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை