தீபாவளி கூட்ட நெரிசலை கண்காணிக்க 'டிரோன்':கைவரிசை ஆசாமிகளை பிடிக்க வியூகம்

தினமலர்  தினமலர்
தீபாவளி கூட்ட நெரிசலை கண்காணிக்க டிரோன்:கைவரிசை ஆசாமிகளை பிடிக்க வியூகம்

கோவை:தீபாவளி பண்டிகை நெருங்குவதால், கோவையில், வணிக நிறுவனங்களில் செல்லும் மக்கள் கூட்டம் அதிகமாகியுள்ளது. நெரிசல் மிகுந்த இடங்களை, 'டிரோன்' உதவியுடன் கண்காணிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்; 'கைவரிசை' ஆசாமிகளை பிடிக்க, பிரத்யேக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும், வரும், 27ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகை நெருங்குவதால் துணி, நகை, வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. வர்த்தக நிறுவனங்கள், துணி கடைகள் நிறைந்துள்ள கிராஸ்கட் ரோடு, நுாறடி ரோடு, டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி உள்ளிட்ட இடங்களில், நெருக்கடி ஜாஸ்தியாகி இருக்கிறது.

இதை பயன்படுத்தி, பொதுமக்களிடம் திருடர்கள் கைவரிசை காட்ட வாய்ப்புள்ளது. இதை தடுக்க மாநகர போலீசார், பாதுகாப்பு ஏற்பாடுகளை துரிதப்படுத்தியுள்ளனர். ஆறு இடங்களில், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.வழிப்பறி திருடர்கள், பிக்பாக்கெட் ஆசாமிகள், சேலை திருடும் பெண்களை பிடிக்க, தனிப்படை போலீசார், 'மப்டி' உடையில் ரோந்து செல்கின்றனர். உக்கடம், காந்திபுரம், மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்டுகளிலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, பெரிய கடை வீதி பகுதிகளில், 150 போலீசார், கிராஸ்கட் ரோடு, நுாறடி ரோட்டில், 150 பேர், சிறப்பு தனிப்படை போலீசார், பிக்பாக்கெட் தடுப்பு பிரிவு, போக்குவரத்து போலீசார் என, 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்பகுதிகளில் கட்டுப்பாட்டு அறை அமைத்து, 'டிரோன்' உதவியுடன் கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர்.சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனர் பாலாஜி சரவணன் கூறுகையில், 'சந்தேகத்துக்கிடமான வகையில் யாரேனும் நடமாடினால், அருகே உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளிக்க வேண்டும்.
நெரிசல் மிகுந்த பகுதிகளில், தற்காலிக கட்டுப்பாட்டு அறை அமைத்து, 'சிசி டிவி' கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். 'டிரோன்' உதவியுடன் கண்காணிக்கவும் உள்ளோம்,'' என்றார்.'மப்டி'யில் ரோந்து!குற்றப்பிரிவு துணை கமிஷனர் பெருமாள் கூறுகையில், ''தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடக்கும் திருட்டு சம்பவங்களை தடுக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தனிப்படை போலீசார், பஸ் மற்றும் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில், 'மப்டி' உடையில் ரோந்து செல்கின்றனர். மாநகரின் அனைத்து இடங்களிலும், 'மைக்' மூலம் போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்,'' என்றார்.

மூலக்கதை