சவாலே சமாளி * கங்குலிக்கு காத்திருக்கும் சிக்கல் | அக்டோபர் 15, 2019

தினமலர்  தினமலர்
சவாலே சமாளி * கங்குலிக்கு காத்திருக்கும் சிக்கல் | அக்டோபர் 15, 2019

 மும்பை: பி.சி.சி.ஐ., புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கங்குலிக்கு நிறைய சவால்கள் காத்திருக்கின்றன. கிரிக்கெட் நிர்வாகத்தில் சீர்திருத்தம், ஐ.சி.சி.,யின் சிக்கலான விதிமுறைகள், ஆதாயம் தரும் இரட்டை பதவி என பல பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டிய நிலையில் உள்ளார்.

இந்திய கிரிக்கெட் போர்டுக்கு(பி.சி.சி.ஐ.,) புதிய தலைவர், செயலர் உள்ளிட்டோரை தேர்வு செய்வதற்கான மனு தாக்கல் செய்ய கடைசி நாள் அக். 14ம் தேதி மாலை 3:00 மணி என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பி.சி.சி.ஐ., முன்னாள் தலைவர் சீனிவாசன் தனது ஆதரவாளர் பிரிஜேஷ் படேலை (கர்நாடகா) முன்னிறுத்தினார். இதற்காக மும்பை ஐந்து நட்சத்திர ஓட்டலில் 100 பி.சி.சி.ஐ., உறுப்பினர்களுக்கு விருந்து கொடுத்து ஆதரவு சேகரித்தார்.

திடீர் திருப்பமாக பி.சி.சி.ஐ., முன்னாள் தலைவரும் மத்திய அமைச்சருமான  அனுராக் தாகூர், கங்குலியின் பெயரை முன்மொழிந்துள்ளார். இவருக்கு வடகிழக்கு,மேற்கு மாநில உறுப்பினர்கள் ஆதரவு கிடைத்தன.

பின் எல்லோரும் கங்குலிக்கு ஆதரவு தெரிவித்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகன் ஜெய் ஷா, பி.சி.சி.ஐ., செயலராகவும், அனுராக் தாகூர் சகோதரர் அருண் துமல் பொருளாளர் பதவிகளை கைப்பற்றினர். கடைசியில் பிரிஜேஷ் படேலுக்கு ஐ.பி.எல்., தலைவர் பதவி பெற்று ஆறுதல் அடைந்துள்ளார் சீனிவாசன்.

இப்படி பல்வேறு தடைகளை தாண்டி தலைவராக உள்ள கங்குலிக்கு காத்திருக்கும் சவால்கள்

* சூதாட்ட சர்ச்சையால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் ‘இமேஜ்’ அடி வாங்கியுள்ளது. இதை சரி செய்து, உலக அரங்கில் மீண்டும் வலிமையாக மீண்டு வரவேண்டும்.

* ஒவ்வொரு ஆண்டும் உலக கோப்பை தொடர் என்ற திட்டத்தால், ஐ.சி.சி., ‘மீடியா’ வருமானத்தின் பெரும் பங்கை அள்ளிச் செல்ல திட்டமிட்டுள்ளது. பி.சி.சி.ஐ., வருமானத்தை பாதிக்கும் இந்த பிரச்னையை கங்குலி எப்படி எதிர்கொள்வார் எனத் தெரியவில்லை.

* கடந்த சில ஆண்டுகளாக ஐ.சி.சி., சார்பில் பி.சி.சி.ஐ.,க்கு தரப்படும் பங்குத் தொகை குறைக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து அதிகமாக வருமானம் கிடைக்கும் நிலையில், கங்குலி மீண்டும் அதிக பணத்தை பெற முயற்சிக்க வேண்டும்.

* ஆதாயம் பெறும் இரட்டை பதவி விவகாரம், டிராவிட், கபில்தேவ் உள்ளிட்ட முன்னாள் வீரர்களுக்கு பெரும் சிக்கலாக உள்ளது. இதை சரி செய்ய வேண்டும்.

 

ஆபத்பாந்தவன்

கடந்த 2000ல் இந்திய கிரிக்கெட் சூதாட்ட புயலில் சிக்கியது. அப்போது கங்குலி கேப்டன் ஆனார். சேவக், ஜாகிர் கான், முகமது கைப், யுவராஜ் சிங் என சிறந்த வீரர்களை கண்டறிந்து இந்திய அணியை அஞ்சத்தக்கதாக மாற்றினார்.

தற்போது மீண்டும் சூதாட்ட பிரச்னையால் கடந்த மூன்று ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த கிரிக்கெட் நிர்வாகத்தை மீட்டெடுக்க தலைவராக வந்துள்ளார் ‘தாதா’ கங்குலி என கூறப்படுகிறது.

 

வீரர்கள் பாராட்டு

முன்னாள் வீரர் சேவக் கூறுகையில்,‘‘இந்திய கிரிக்கெட்டில் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டீர்கள். இதன் தொடர்ச்சியாக தலைவர் பதவியிலும் சாதிக்க வேண்டும். கங்குலி தலைவரானது நல்ல விஷயம்,’’ என்றார்.

மற்றொரு வீரர் முகமது கைப் கூறுகையில்,‘‘கிரிக்கெட் முன்னேற்றத்திற்காக கங்குலியிடம் புதிய புதிய முடிவுகளை எதிர்பார்க்கிறேன்,’’ என்றார்.

முன்னாள் வீரர் லட்சுமண் கூறுகையில்,‘‘உங்களது தலைமையில் இந்திய கிரிக்கெட் செழிப்பாக வளரும் என்பதில் சந்தேகம் இல்லை. தலைவர் பதவியில் வெற்றிகரமாக செயல்பட வாழ்த்துக்கள்,’’ என்றார்.

 

இழப்பு அதிகம்

பி.சி.சி.ஐ., தலைவராக கங்குலி 10 மாதம் மட்டும் செயல்படுவார். இதில் இவருக்கு லாபத்தை விட நஷ்டம் தான் அதிகம். ஏனெனில் வர்ணனையாளராக உள்ள இவருக்கு, வர்த்தக ஒப்பந்தம், பயிற்சியாளர், ஆலோசனை குழு என பல வழிகளில் ரூ. 7 கோடி வருமானம் இழப்பு ஏற்படும்.

 

முதல்வர் வேட்பாளரா

வரும் மேற்குவங்க சட்டசபை தேர்தலில் பா.ஜ., சார்பில் முதல்வர் வேட்பாளராக கங்குலி முன்னிறுத்தப்படலாம் என செய்திகள் வெளியாகின. இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா கூறுகையில்,‘‘யாருடைய தயவும் இல்லாமல் லோக்சபா தேர்தலில், மேற்குவங்கத்தில் 18 இடங்களில் வெற்றி பெற்றோம். கங்குலியிடம் எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. அவர் விரும்பினால் பா.ஜ.,வில் சேரலாம்,’’ என்றார்.

மூலக்கதை