சொத்துக்களுடன் ஆதார் எண் இணைப்பு ஆணையத்துக்கு டெல்லி ஐகோர்ட் கெடு

தினகரன்  தினகரன்
சொத்துக்களுடன் ஆதார் எண் இணைப்பு ஆணையத்துக்கு டெல்லி ஐகோர்ட் கெடு

புதுடெல்லி: சொத்து, நில ஆவணங்களை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பாக அடுத்த  மாதம் 20ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி ஆதார் ஆணையத்துக்கு டெல்லி  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கி கணக்கு, எரிவாயு இணைப்பு, பான் கார்டு என ஒவ்வொன்றையும் ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி நடந்து வருகிறது. இதனிடையே,  பாஜ வக்கீல் அஷ்வினி குமார் உபாத்யாய், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல்  செய்த பொதுநலன் மனுவில், `கருப்பு பணம், ஊழல், பினாமி பரிவர்த்தனை ஆகியவற்றை  தடுக்க சொத்து, நில ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும். இதனால், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அதிகமாக சொத்து  வாங்கி குவிக்க முடியாது’ என கூறப்பட்டிருந்தது.இதைத் தொடர்ந்து, நில ஆவணங்கள், அசையும், அசையா சொத்துக்களையும், ஆதாருடன்  இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை டெல்லி  உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். படேல் கொண்ட அமர்வில் நேற்று  விசாரணைக்கு வந்த போது, ‘`சொத்து, நில ஆவணங்களை ஆதார்  எண்ணுடன் இணைப்பது தொடர்பாக, அடுத்த விசாரணை தேதியான நவம்பர் 20ம்  தேதிக்குள் ஆதார் அமைப்பு பதிலளிக்க  வேண்டும். இது தொடர்பாக ஏற்கனவே கடந்த ஜூலை 16ம் தேதி நோட்டீஸ் அனுப்பியும்  பதிலளிக்காத மத்திய, டெல்லி மாநில அரசும் பதிலளிக்க வேண்டும்,’’ என்று  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மூலக்கதை