நல்லமிளகு விலை கிலோ 300 ஆக சரிவு

தினகரன்  தினகரன்
நல்லமிளகு விலை கிலோ 300 ஆக சரிவு

நாகர்கோவில்: நான்காண்டுகளுக்கு முன்பு 750 வரை விற்பனை செய்யப்பட்ட நல்லமிளகு விலை தற்போது கிலோ 300 ஆக சரிந்துள்ளது. கேரளாவுக்கு அடுத்து குமரி மாவட்டத்தில் நல்லமிளகு, கிராம்பு, ஜாதிக்காய் போன்ற பயிர்கள் மலையோர பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. குமரி மாவட்டம் மற்றும் கேரளா மாநில பகுதிகளில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நல்லமிளகு சீசன் தொடங்கும். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிலோ ரூ.750 வரை நல்ல மிளகு விற்பனையானது. கடந்த சில ஆண்டுகளில் கிலோ 600, 550 என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.  இந்தநிலையில் தற்போது நல்லமிளகு கிலோ 300 என்ற அடிப்படையில் நல்ல மிளகு விற்பனையாகிறது. சீசன் தொடங்கும் வேளையில் மேலும் விலை சரிவு ஏற்பட்டு கிலோ 250 வரை வர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கூறி வருகின்றனர். சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் நல்ல மிளகு தேவை குறைந்ததும், இறக்குமதி அதிகரித்ததும் விலை சரிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. வட இந்தியாவில் நல்ல மிளகு மார்க்கெட் மந்தகதியில் இருப்பதும் இதற்கு மற்றொரு காரணமாக கருதப்படுகிறது. தற்போதுள்ள விலையில் நல்லமிளகு தோட்டங்களை பராமரிப்பது கூட இயலாத நிலையில் உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். அதனை போன்று விலை அதிகரிக்கும் என்ற எண்ணத்துடன் விவசாயிகள் நல்ல மிளகு இருப்பு வைத்துள்ளனர். தற்போது பெய்து வருகின்ற கன மழையும் நல்ல மிளகு உற்பத்தியை பாதித்துள்ளது.

மூலக்கதை