இந்திய பொருளாதார வளர்ச்சி குறையும்: ஐஎம்எப் கணிப்பு

தினகரன்  தினகரன்
இந்திய பொருளாதார வளர்ச்சி குறையும்: ஐஎம்எப் கணிப்பு

வாஷிங்டன்: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை ஏற்கெனவே நிர்ணயித்ததை விட ஐஎம்எப் குறைத்துள்ளது.  இந்திய பொருளாதார வளர்ச்சி மிகவும் மந்த நிலையில் உள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், உலக பொருளாதார நாடுகளில் போட்டி திறன் தரவரிசை பட்டியலில் இந்தியா 10 இடங்கள் பின்தங்கியுள்ளது என உலக பொருளாதார கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  இதுபோல், உலக வங்கி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 6 சதவீதமாக குறைத்து மதிப்பீடு செய்தது. வங்கதேசம், நேபாளத்தை விடவும் பின்தங்கியுள்ளது. இந்திய பொருளாதாரத்துக்கு பெரும் ஆபத்து உள்ளது என நேற்று முன்தினம் எச்சரித்திருந்தது. இந்நிலையில் ஐஎம்எப் (சர்வதேச நிதியம்) நேற்று வெளியிட்ட அறிக்கையில், 2018-19 நிதியாண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.1 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு இந்த அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிவிப்பில் ஜிடிபி 7.3 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தது. இருப்பினும், நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி 7 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதேநேரத்தில், நிதிக்கொள்கை முடிவுகள், பெரிய நிறுவனங்களுக்கான வரி குறைப்பு, ஊரக பகுதியில் நுகர்வை அதிகரிப்பதற்கு மத்திய அரசு எடுத்துவரும் சில முயற்சிகள் வளர்ச்சிக்கு உதவ வாய்ப்புகள் உள்ளன எனவும் கூறியுள்ளது.  ஐஎம்எப் (சர்வதேச நிதியம்) இயக்குநர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா, ‘‘உலகில் 90 சதவீத நாடுகள் பொருளாதார மந்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் இந்தியாவின் நிலைமை படு மோசம்’’ என கடந்த வாரம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை