குர்திஷ் படைகள் மீது தாக்குதல் நடத்திய துருக்கியின் பொருளாதாரத்தை அழிக்க தயாராக இருக்கிறேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆவேசம்

தினகரன்  தினகரன்
குர்திஷ் படைகள் மீது தாக்குதல் நடத்திய துருக்கியின் பொருளாதாரத்தை அழிக்க தயாராக இருக்கிறேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆவேசம்

வாஷிங்டன்: சிரியா நாட்டின் குர்து படைகள் மீது தாக்குதல் நடத்தியதை  கண்டித்து துருக்கி மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.  மேலும், அந்நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க தயாராக இருப்பதாக  அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். சிரியா உள்நாட்டு போரில்  அரசுக்கு ஆதரவாக ரஷ்யா களமிறங்கியது. அங்குள்ள குர்து போராளிகளுக்கு  அமெரிக்கா ஆதரவு அளித்தது. ஆனால், கடந்த 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது. ‘ஆப்கன்,  சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் விலக்கி கொள்ளப்படும்,’ என டிரம்ப்  வாக்குறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து, சிரியாவின் வடக்குப் பகுதியில் இருந்த அமெரிக்கப் படைகள் சமீபத்தில்  விலக்கிக்  கொள்ளப்பட்டது.இதையடுத்து, எல்லையோர பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக  இருப்பதாக கூறி, குர்துக்கள் மீது தாக்குதல் நடத்தும்படி துருக்கி அதிபர் ரிசெப்  தாயீப் எர்டோகன் உத்தரவிட்டார். அதன்படி நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்.  இந்நிலையில், குர்திஷ் படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து, துருக்கி மீது  அமெரிக்கா கூடுதல் பொருளாதார தடைகளை நேற்று முன்தினம் விதித்தது. இது குறித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர்  நான்சி பெலோசிக்கு எழுதிய கடிதத்தில்,  துருக்கி விவகாரம்  தேசிய அவசர நிலை’ என அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இது  தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், `துருக்கி தலைவர்கள் தொடர்ந்து  ஆபத்தான, அழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்தால், அந்நாட்டின்  பொருளாதாரத்தை அழிக்க தயாராக இருக்கிறேன். தொடர் மனித உரிமை மீறலில்  ஈடுபடுபவர்கள், அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துபவர்கள்,  புலம் பெயர்ந்தவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி செல்வதை தடுப்பவர்கள்,  அகதிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றுபவர்கள், அமைதிக்கு அச்சுறுத்தல் விடுப்பவர்கள்  மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது,’ என தெரிவித்துள்ளார். மேலும்  அதில், `துருக்கியின் பாதுகாப்பு, உள்துறை மற்றும் எரிசக்தி துறை  அமைச்சர்களுக்கு எதிரான நிதி பரிவர்த்தனைக்கு தடையை விதிக்கவும் அமெரிக்க  நிதியமைச்சகத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இவர்களுக்குள்ள சொத்துக்களை முடக்கவும், அமெரிக்காவிற்குள் நுழையவும் அனுமதி  மறுக்கப்படுகிறது. அமெரிக்கா-துருக்கி இடையிலான ரூ.7 லட்சம் கோடி (100  பில்லியன் அமெரிக்க டாலர்) வர்த்தக பேச்சுவார்த்தை நிறுத்தி  வைக்கப்படுகிறது. இது தவிர, கடந்த மே மாதம் விலக்கு அளிக்கப்பட்டுள்ள   துருக்கி இரும்பு இறக்குமதி மீதான வரி மீண்டும் 50 சதவீதமாக்கப்படுகிறது’  எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.நேட்டோவுக்கு அழுத்தம்டிரம்ப்பின் அறிக்கை குறித்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் விடுத்துள்ள  அறிக்கையில், `அமெரிக்கா, சர்வதேச நாடுகளின் தொடர் எதிர்ப்பு,  எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் துருக்கி அதிபர் எர்டோகன் ஒருதலைபட்சமாக,  சிரியாவின் வடபகுதியில் தாக்குதல் நடத்தியிருப்பதால் அழிவு, உயிர் பலி,  அகதிகள், பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரம் பெல்ஜியத்தில் பிரஸ்சல்ஸ் நகரில் நடக்கவிருக்கும் நேட்டோ கூட்டத்தில்,  துருக்கி மீது  ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு அழுத்தம் கொடுக்கப்படும்’ எனக்  கூறியுள்ளார். ‘பேரழிவை சந்திக்கும்’அமெரிக்க  வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ கூறுகையில், ‘`மனிதாபிமானத்துக்கு  நெருக்கடி அளிக்கும், அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களில் துருக்கி  தொடர்ந்து ஈடுபடுமானால், அதிபர் டிரம்ப் தெளிவாக கூறியிருப்பது போல,  பேரழிவு தரக் கூடிய விளைவுகளை அந்நாடு சந்திக்க வேண்டியிருக்கும்’’ என  தெரிவித்தார்.

மூலக்கதை