வாக்காளர் சரி பார்ப்பு திட்டம்; கடைசி இடத்தில் சென்னை

தினமலர்  தினமலர்
வாக்காளர் சரி பார்ப்பு திட்டம்; கடைசி இடத்தில் சென்னை

சென்னை : வாக்காளர் சரி பார்ப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் சென்னை கடைசி இடம் பிடித்துள்ளது.நாடு முழுவதும் வாக்காளர் சரி பார்ப்பு திட்டம் செப். 1ல் துவக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் வாக்காளர்கள் 'voter helpline' என்ற அலைபேசி செயலி மற்றும் 'www.nvsp.in' என்ற இணையதளம் வாயிலாக தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் சரியாக உள்ளதா என்பதை செப். 30க்குள் சரி பார்க்க வேண்டும் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.இந்த வாக்காளர் சரி பார்ப்பு திட்டம் நவ. 18 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் மொத்தம் உள்ள 5.99 கோடி வாக்காளர்களில் 1.87 கோடி பேர் தங்கள் பெயரை சரி பார்த்துள்ளனர். அவர்களில் 5.78 லட்சம் பேர் தங்கள் பெயர் முகவரி போன்றவற்றில் திருத்தம் செய்யவும் விண்ணப்பித்துள்ளனர்.

வாக்காளர் சரி பார்ப்பு திட்டத்தில் பெரம்பலுார் முதலிடத்தில் உள்ளது; அங்கு 86 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சரி பார்த்துள்ளனர். இரண்டாம் இடத்தில் உள்ள அரியலுார் மாவட்டத்தில் 69 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சரி பார்த்துள்ளனர்.சென்னை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில் 8 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் பெயரை சரி பார்த்துள்ளனர். கோவை மாவட்டத்தில் 37.53; திருச்சியில் 36.96; திருநெல்வேலியில் 34; நீலகிரியில் 54; கன்னியாகுமரியில் 23 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் பெயரை சரி பார்த்துள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு பணியை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வாக்காளர் சரி பார்ப்பு திட்ட விழிப்புணர்வு குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். விழிப்புணர்வு பணிகளை தீவிரப்படுத்தும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

சீமான் விவகாரம்: அறிக்கை கேட்பு


விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசாரம் செய்தபோது 'ராஜிவை கொன்றது நாங்கள் தான்' என பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

'அவர் பேசியது தேச விரோத செயல்; அவரை கைது செய்ய வேண்டும். அவரது கட்சி வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என காங். செயல் தலைவர் ஜெயகுமார் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பி அறிக்கை கேட்டுள்ளார். அவர் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்கும்.

ரூ.91 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்


இடைத்தேர்தல் நடக்கும் விக்கிரவாண்டி நாங்குநேரி சட்டசபை தொகுதிகளில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் வரை 48.12 லட்சம் ரூபாய் ரொக்கம் 25.46 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 22 ஆயிரத்து 847 லிட்டர் மதுபானமும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.மேலும் வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்காக எடுத்து செல்லப்பட்ட 13.85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் 3.7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க வெள்ளி நகைகள் என மொத்தம் பணம் பொருட்கள் என 91.13 லட்சத்திற்கு பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.

மூலக்கதை