நவீன உலகில் தொழில்நுட்பமே முக்கியம்: அஜித் தோவல்

தினமலர்  தினமலர்
நவீன உலகில் தொழில்நுட்பமே முக்கியம்: அஜித் தோவல்

புதுடில்லி : ''நவீன உலகில், பணமும், தொழில்நுட்பமும் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதில், தொழில்நுட்பம் தான் மிகவும் முக்கியம்,'' என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறினார்.

டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின், 41வது மாநாடு, டில்லியில் நேற்று துவங்கியது. இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசியதாவது: 'தொழில்நுட்பங்கள் இந்தியாவை பாதுகாப்பானதாக மாற்றுகின்றன. பாதுகாப்பு அமைப்புகள், உளவுத்துறையுடன் இணைந்து, எதிரிகளுக்கு கடுமையான பதிலடி கொடுப்பதற்கு நமக்கு என்ன தேவை என்பது குறித்து ஆலோசனை நடத்த வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற ராணுவம், தாக்குதல் மற்றும் இலக்கு குறித்து முடிவு செய்கிறது. அதனிடம் தான் எப்போதும் உயரிய தொழில்நுட்பம் இருக்கும்.

ராணுவ தொழில்நுட்பத்தில், நாம் இரண்டாவது இடத்தில் தான் இருக்கிறோம். ஆனால், இரண்டாம் இடத்தில் இருப்பவர்களுக்கு எந்த கோப்பையும் கிடையாது. எதிரிகளை விட நீங்கள் சிறந்தவராக இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். ஆனால், நவீன உலகில், பணமும், தொழில்நுட்பமும் தான் ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்த இரண்டில், தொழில்நுட்பம் தான் முக்கியம். இந்தியாவின் பாதுகாப்பு, சவால்கள் நிறைந்தது. வரும் காலங்களில், இந்த சவால்கள் மேலும் அதிகரிக்கும். அதனால் நமது பாதுகாப்பை, நவீன தொழில்நுட்பங்களை கொண்டு மேம்படுத்த வேண்டும். அதற்கு, முப்படைகளும் நவீனமயமாக்கப்பட வேண்டும். ராணுவத்தை நவீனமயமாக்குவதை, முக்கிய கொள்கையாக, மத்திய அரசு கொண்டுள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. இதை ஒருங்கிணைக்கும் பணியை, டி.ஆர்.டி.ஓ.,வை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. இவ்வாறு, அஜித் தோவல் பேசினார்.

ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை தலைமை தளபதி ஆர்.கே.எஸ். பதுரியா, கப்பல்படை தலைமை தளபதி கரம்பீர் சிங், டி.ஆர்.டி.ஓ., தலைவர் சதீஷ் ரெட்டி ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு ஆயுதங்கள்


ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், பேசியதாவது: ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் இறக்குமதி செய்யும் நாடுகளில், இந்தியா முன்னிலை வகிக்கிறது. சுதந்திரம் பெற்று, 70 ஆண்டுகள் ஆகிவிட்ட பின்னும், இறக்குமதியை தொடர்வது நமக்கு பெருமை அல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே, இந்நிலை மாறி வருகிறது. நமக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை, உள்நாட்டிலேயே தயாரிக்கும் பணிகளை, டி.ஆர்.டி.ஓ., வெற்றிகரமாக செய்து வருகிறது.

எனவே, நாம் அடுத்து சந்திக்க போகும் போரை, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை கொண்டு போரிட்டு வெல்வோம். எதிர்காலத்தில் நடக்கும் போர்கள், நேரடியானதாக இருக்காது. எனவே, 'சைபர் ஸ்பேஸ், லேசர், ரோபோட்டிக்ஸ்', விண்வெளி, மின்னியல், செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளிலும், நாம் அடுத்த கட்டத்துக்கு முன்னேற வேண்டி உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.

மூலக்கதை