கோரிக்கை! வெள்ளாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்ட... மழை காலத்தில் கிராமங்கள் தீவுகளாகும் அவலம்

தினமலர்  தினமலர்
கோரிக்கை! வெள்ளாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்ட... மழை காலத்தில் கிராமங்கள் தீவுகளாகும் அவலம்

கம்மாபுரம்:காவனூர் - கள்ளிப்பாடி இடையே வெள்ளாற்றின் குறுக்கே பாலம் இல்லாததால், மழை காலங்களில், 20 கிராமங்கள் தீவுகளாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

கம்மாபுரம் ஒன்றியத்தில் மணிமுக்தாறு, வெள்ளாறு என இரு ஆறுகள் ஓடுகின்றன. இவற்றின் இடையில், மருங்கூர், காவனூர், தே.பவழங்குடி, சி.கீரனுார், கார்மாங்குடி, மேலப்பாலையூர், தேவங்குடி உட்பட 15 கிராம மக்கள் வசிக்கின்றனர்.இதனால், மழை காலங்களில் 20 கிராமங்களும், மழை நீர் சூழ்ந்து தீவுகளாக மாறி விடுகின்றன. இப்பகுதி மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளாற்றை கடந்து, 3 கி.மீ., தூரத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் செல்ல வேண்டியுள்ளது.

தற்போது கோடைக்காலம் என்பதால், வெள்ளாற்றில் தற்காலிகமாக அமைத்த மண் சாலை வழியாக தினமும் மாணவர்கள் இரு சக்கர வாகனங்களிலும், நடந்தும் சென்று வருகின்றனர்.25 கி.மீ., சுற்ற வேண்டும்மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் வரும் போது, மூன்று மாதத்திற்கு ஆற்றை கடந்து செல்ல முடியாது. அப்போது இப்பகுதி மாணவர்கள் கருவேப்பிலங்குறிச்சி, ராஜேந்திரபட்டினம் வழியாக 25 கி.மீ., தூரம் சுற்றி, ஸ்ரீமுஷ்ணம் சென்று படித்து வருகின்றனர். பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வர முடியாமல் அவதியடைகின்றனர்.

விவசாயிகள் கடும் அவதி

விவசாயிகள், நெல், மணிலா, மக்காச்சோளம், கம்பு, எள், கேழ்வரகு, பூக்கள், காய்கறிகள், கீரைகளை விற்க 25 கி.மீ., தூரம் சுற்றி ஸ்ரீமுஷ்ணம், ஜெயங்கொண்டம், அரியலூர், காட்டுமன்னார்குடி, சேத்தியதோப்பு, சிதம்பரம் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டும். நீண்ட தூரம் சுற்றிச் செல்வதால் விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.காவனூருக்கும், கள்ளிப்பாடிக்கும் இடையே வெள்ளாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டித் தரக்கோரி மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் பலமுறை முறையிட்டும் பயனில்லை.

இழப்பு அதிகம்

பாலம் இல்லாததால். இப்பகுதியில் உள்ள கிராமங்களில் தீவிபத்து ஏற்பட்டால், விருத்தாசலம் அல்லது ஸ்ரீமுஷ்ணத்திலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவேண்டும். வெள்ளாற்றை கடந்து மூன்று கி.மீ., தூரத்தில் உள்ள கிராமங்களுக்கு, ஸ்ரீமுஷ்ணத்திலிருந்து வரும் தீயணைப்பு வாகனம் ராஜேந்திரப்பட்டினம், கருவேப்பிலங்குறிச்சி வழியாக 25 கி.மீ., தூரம் சுற்றி வரவேண்டியுள்ளது.இதனால் நேரம் விரயமாவதுடன், தீயணைப்பு வாகனம் வருவதற்குள், அதிக பொருள் சேதமும் ஏற்படுகிறது. இரு வாரங்களுக்கு முன் தேவங்குடியில் ஏற்பட்ட தீ விபத்தை தடுக்க பாலம் இல்லாததால், 9 கி.மீ., தூரத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணத்திலிருந்து தீயணைப்பு வாகனம் வரமுடியவில்லை. விருத்தாசலம் தீயணைப்பு வாகனம் 25 கி.மீ., சுற்றிக் கொண்டு வருவதால், அதற்குள் வீடுகள் எரிந்து சாம்பாலாகி விடுகிறது.எனவே, கிராம மக்கள், மாணவர்கள் நலன் கருதி, காவனூர் -கள்ளிப்பாடி இடையே வெள்ளாற்றின் குறுக்கே 500 மீட்டர் தூரத்திற்கு உயர் மட்ட பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மூலக்கதை