துருக்கி நாட்டின் மீது பொருளாதார தடை

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்:சிரியாவில் தாக்குதல் நடத்தி வரும் துருக்கி மீது பொருளாதார தடை விதிப்பதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடான சிரியாவில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை ஒடுக்கும் நடவடிக்கையில், அமெரிக்கா ஈடுபட்டு வந்தது. 'எந்தப் பலனும் இல்லாத நீண்ட கால போரை விரும்பவில்லை' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் கூறினார்.சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகளை விலக்கி கொள்வதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில், சிரியாவின் வடக்குப் பகுதியில் வலுவாக இருக்கும் குர்து படைகளால், தன் எல்லைக்கு அச்சுறுத்தல் உள்ளதாக, அதன் அண்டை நாடான துருக்கி கூறி வந்தது.அதனால், சிரியாவின் வடக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தப்படும் என, அறிவித்திருந்தது.அதன்படி, கடந்த சில நாட்களாக சிரியாவின் வடக்குப் பகுதியில், துருக்கிப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு, பல்வேறு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், துருக்கி மீது பொருளாதாரத் தடை விதிப்பதாக, அமெரிக்கா அறிவித்து உள்ளது. இதற்கான உத்தரவில், அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டு உள்ளார்.துருக்கியின் முக்கிய அமைச்சர்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.இவர்களுக்கு சொந்தமாக அமெரிக்காவில் உள்ள அனைத்து சொத்துக்களும் முடக்கப்படுகின்றன.துருக்கி உடனான அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களும் நிறுத்தப்படுகின்றன.

மூலக்கதை