'புக்கர்' விருது இருவருக்கு பகிர்ந்தளிப்பு: விதிமுறைகளை தகர்த்த நடுவர் குழு

தினமலர்  தினமலர்
புக்கர் விருது இருவருக்கு பகிர்ந்தளிப்பு: விதிமுறைகளை தகர்த்த நடுவர் குழு

லண்டன்:இந்தாண்டுக்கான, 'புக்கர்' விருது, கனடாவைச் சேர்ந்த மார்க்ரெட் அட்வுட், பிரிட்டனைச் சேர்ந்த பெர்னார்டைன் எவரிஸ்டோ ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

'புக்கர் விருதை, ஒருவருக்கு மட்டுமே வழங்க வேண்டும்; பிரித்து வழங்கக் கூடாது' என்ற விதிமுறையை தகர்த்து, நடுவர் குழுவினர், விருதை, இருவருக்கு பகிர்ந்தளித்தனர். உலக அளவில், ஆங்கிலத்தில் எழுதப்படும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, 'புக்கர்' விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. ஆங்கில இலக்கிய எழுத்தாளர்களிடையே, இந்த விருது, மிகவும் மதிப்பு மிக்கதாக கருதப்படுகிறது.
ஐரோப்பிய நாடான, பிரிட்டனின், லண்டனில் உள்ள ஒரு அமைப்பு, 1969ல் இருந்து, இந்த விருதை வழங்குகிறது. விருதுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு, விருது, சான்றிதழுடன், 45 லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்படும். பெருமைஇந்தாண்டுக்கான விருதுக்கு, கனடாவைச் சேர்ந்த மார்க்ரெட் அட்வுட், 79, பிரிட்டனைச் சேர்ந்த பெர்னார்டைன் எவரிஸ்டோ, 60, ஆகியோரை, நடுவர் குழு தேர்வு செய்தது.

இதில், எவரிஸ்டோ, புக்கர் விருது பெறும், முதல் கறுப்பின பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.அதேபோல், அட்வுட், புக்கர் விருது பெற்றவர்களிலேயே, மிகவும் வயதானவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். விருதுக்கான இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆறு படைப்புகளில், பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின், 'குயிச்சோட்டி' என்ற நாவலும் இடம் பெற்றிருந்தது.ஆனால், அவரது படைப்பு, விருதுக்கு தேர்வு செய்யப்படவில்லை. அட்வுட் எழுதிய, 'தி டெஸ்டாமென்ட்' என்ற படைப்பும், எவரிஸ்டோ எழுதிய, 'கேர்ள், உமன், அதர்' என்ற படைப்பும், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டன.

புக்கர் விருது துவங்கப்பட்ட சில ஆண்டுகளில், இருவருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. ஆனால், 1992ல், விருதுக்கு புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. இதன்படி, 'புக்கர் விருதை, இருவருக்கு பகிர்ந்தளிக்க கூடாது. ஒருவருக்கு மட்டுமே வழங்க வேண்டும்' என்ற விதி உள்ளது. இந்த விதிமுறையை தகர்த்து, புக்கர் விருதை, இருவருக்கு பகிர்ந்தளிப்பதாக நடுவர் குழுவினர் அறிவித்தனர்.

இது குறித்து, ஐந்து உறுப்பினர் உடைய நடுவர் குழுவின் தலைவர் பீட்டர் புளோரன்ஸ் கூறுகையில், ''இந்தமுறை, விதிகளை மீற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி விட்டோம். இரண்டு படைப்புகளுமே, மிகச் சிறந்த படைப்புகள். எனவே, ஒன்றை மட்டும் விருதுக்கு தேர்வு செய்ய முடியாது,'' என்றார். இதன்படி, பரிசுத் தொகையான, 45 லட்சம் ரூபாய், அட்வுட், எவரிஸ்டோவுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

மகிழ்ச்சிஇது குறித்து அட்வுட் கூறுகையில்,''நான், மிகவும் வயதான எழுத்தாளர் என நினைத்தேன். அதேநேரத்தில், ஒரு இளம் எழுத்தாளருடன் விருதை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.தனியாக வந்து விருது பெற்றிருந்தால், சற்று தர்மசங்கடமாக இருந்திருக்கும். ஆனால், இப்போது மகிழ்ச்சியாக உணர்கிறேன்,'' என்றார்.

இது குறித்து எவரிஸ்டோ கூறுகையில், ''கறுப்பின பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை, கறுப்பின பெண்கள் எழுதாமல், வேறு யார் எழுதுவது. மூத்த எழுத்தாளரான அட்வுட்டுடன் விருதை பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி,'' என்றார். எவரிஸ்டோ எழுதிய, 'கேர்ள், உமன், அதர்' என்ற நாவல், பிரிட்டனைச் சேர்ந்த சில கறுப்பின பெண்கள், ஆப்ரிக்க நாடுகளுக்கு இடம் பெயர்ந்து செல்வதை மையமாக வைத்து எழுதப்பட்டது.

மூலக்கதை