காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரத்தில் காங். வதந்தியை பரப்புகிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரத்தில் காங். வதந்தியை பரப்புகிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

சார்கிதாத்ரி: ‘‘காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் தொடர்பாக  இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் காங்கிரஸ் வதந்தியை பரப்பி வருகிறது,’’ என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். அரியானாவில் வரும் 21ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரத்தில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். நேற்று அவர், இம்மாநிலத்தில் உள்ள சார்கிதாத்ரி பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது: இந்த மாநிலத்தில் ஊழலற்ற, வெளிப்படைத்தன்மையான ஆட்சியை அளித்து வரும் பாஜ.வுக்கு மீண்டும் வாக்களித்து ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க மக்கள் முடிவு செய்துள்ளனர். மல்யுத்த வீராங்கனை பபிதா  போகத் அரசியலில் நுழைந்துள்ளார். அவர் பாஜ வேட்பாளராக சார்கிதாத்ரி சட்டப்பேரவை தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். அவரை வெற்றி பெற செய்யுங்கள். அரியானா மாநில பெண்கள் அனைத்து துறைகளிலும் தங்கள் திறமையை  நிருபித்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் காங்கிரஸ் வதந்தியை பரப்பி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.`டங்கல்’ பார்த்த சீன அதிபர்கூட்டத்தில் மோடி பேசுகையில், ‘`மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நான் பேச்சுவார்த்தை நடத்தியபோது, இந்தி திரைப்படமான ‘டங்கல்’ பார்த்தேன் என அவர் தெரிவித்தார். மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகத் தனது  இருமகள்களான கீதா போகத், பபிதா போகத்துக்கு மல்யுத்தம் கற்றுக் கொடுப்பது தொடர்பான இந்த படத்தை பார்த்ததாக சீன அதிபர் தெரிவித்தது என்னை பெருமை கொள்ள செய்தது,’’ என்றார். நடிகர் அமீர்கான் நடித்து இந்தியில் கடந்த 2016ல்  வெளிவந்த ‘டங்கல்’ திரைப்படம், மல்யுத்த வீராங்கனை பபிதா போகத்தின் கதையாகும். இது, 2016ல் வெளிவந்தது. தற்போது, சார்கிதாத்ரி தொகுதியில் பாஜ வேட்பாளராக பபிதா போகத் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆயுஷ்மான் திட்டம் மோடி பெருமிதம்உலகின் மிகப் பெரிய சுகாதாரத்திட்டமான ஆயுஷ்மான் பாரத், கடந்த 2018 செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.  இதன் மூலம், ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ₹5 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது. நாட்டிலுள்ள ஏழைகள், நலிவடைந்த நிலையில் உள்ள 10 கோடி மக்களின் சுகாதாரத்துக்கு இத்திட்டம் உறுதி அளிக்கிறது. இத்திட்டம் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு நன்றி. கடந்த ஓராண்டில் இத்திட்டத்தின் மூலம் 50 லட்சம் பேர் இலவச மருத்துவ சிகிச்சை பெற்று பயன் அடைந்துள்ளனர். இந்தியர்களாக நாம் பெருமைப்படுவோம். சிகிச்சை மட்டுமின்றி இத்திட்டம் பல கோடி இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி உள்ளது’ என கூறியுள்ளார்.

மூலக்கதை