கவனத்தை திசை திருப்புகிறார் மோடி: ராகுல் குற்றச்சாட்டு

தினமலர்  தினமலர்
கவனத்தை திசை திருப்புகிறார் மோடி: ராகுல் குற்றச்சாட்டு

மும்பை : ''முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் பிரதமர் மோடி செயல்படுகிறார்'' என காங்கிரஸ் எம்.பி. ராகுல் பேசினார்.

மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ. - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு அக்.21ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. யவாத்மாலில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் பேசியதாவது:பிரதமர் மோடி சில தொழில் அதிபர்களின் ஒலி பெருக்கியாக செயல்படுகிறார்.

அவர் அமல்படுத்திய சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் விவசாயிகள் தொழிலாளிகள் சிறு வர்த்தகர்கள் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நாட்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. சில தொழில் அதிபர்களுக்காக கார்ப்பரேட் வரி குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் ஏழை மக்களுக்காக எந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை.பொதுத்துறை நிறுவனங்களான துறைமுகம் ஏர் இந்தியா சுரங்கங்கள் ஆகியவற்றை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சிகள் தீவிரமாக நடக்கின்றன.

அதானி அம்பானி போன்ற தொழில் அதிபர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி செயல்படுகிறார். முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் செயல்படுகிறார். ஜெட் விமான கொள்முதலில் 35 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்தள்ளது. ஆனால் எந்த மீடியாக்களும் இது குறித்து எழுதுவது இல்லை.மஹாராஷ்டிராவில் ஏழைகள் விவசாயிகள் தொழிலாளுக்காக செயல்படும் நல்ல அரசை காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் அமைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

'கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்'ஹிந்து மகாசபா அமைப்பின் தலைவரான மறைந்த சாவர்க்கருக்கு பாரத் ரத்னா விருது அளிக்கும்படி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதாக மஹாராஷ்டிரா மாநில பா.ஜ. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் சாவர்க்கருக்கு பாரத் ரத்னா விருது கொடுக்கப்பட்டால் இந்த நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
மனீஷ் திவாரி, செய்தி தொடர்பாளர், காங்.நமது டில்லி நிருபர்

ராகுலின் தேர்தல் பிரசார பயணத்தை முக்கிய தலைவர்கள் தவிர்ப்பதால் மஹாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என வரும் தகவலால் காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் காங்கிரஸ்- - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பிரசார களத்தில் பின்தங்கி இருக்கிறது. ஓட்டுப்பதிவுக்கான நாள் நெருங்கிவிட்ட நிலையிலும் பா.ஜ. -- சிவசேனாவுக்கு சவால்விடும் வகையில் பிரசாரத்தை முன்னெடுக்கவோ தீவிர களப்பணியாற்றவோ காங்கிரஸ் அணியில் யாருமே இல்லை.

காங். முன்னாள் தலைவர் ராகுல் இதுவரையிலும் பங்கேற்ற இரண்டு பொதுக்கூட்டம் மற்றும் பேரணியில் அம்மாநில முக்கிய தலைவர்கள் பங்கேற்காமல் தவிர்த்துவிட்டனர். மாநிலத்தின் முன்னாள் தலைவர்களான மிலிந்த் தியோரா சஞ்சய் நிருபம் இருவரும் ராகுலின் கூட்டத்தில் 'ஆப்சென்ட் 'ஆனது அக்கட்சி நிர்வாகிகளால் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 'சொந்த வேலையால் ராகுல் கூட்டத்தில் பங்கேற்கவில்லை' என 'டுவிட்டரி'ல் செய்தி வெளியிட்ட சஞ்சய் நிருபம் மிலிந்த் தியோராவை பெயர் கூறாமல் குறிப்பிட்டு அந்த உதவாக்கரை ஏன் கலந்து கொள்ளவில்லை' என தாக்கியிருந்தது கோஷ்டி பூசலை அப்பட்டமாக காட்டியது.

உட்கட்சி பூசல்களால் முக்கிய தலைவர்கள் அமைதி காக்கும் நிலையில் பிரசார செலவுக்கும் பணம் இல்லாமல் காங்கிரஸ் நிர்வாகிகள் திண்டாடுகின்றனர்.தேர்தல் முடிவில் தேசியவாத காங்கிரசைவிட காங்கிரஸ் குறைவான தொகுதிகளில் வெற்றிபெற நேர்ந்தால் அதன் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடுமோ என்ற அச்சமும் காங்கிரஸ் மேலிடத்தில் எழுந்துள்ளது. இதனால் கட்சி செய்வதறியாது திகைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை