அக்.,17 முதல் துவங்குது! வடகிழங்கு பருவமழை

தினமலர்  தினமலர்
அக்.,17 முதல் துவங்குது! வடகிழங்கு பருவமழை

சென்னை : நான்கு மாதங்களாக கொட்டிய தென்மேற்கு பருவமழை, இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

தமிழகத்தின் முக்கிய மழை ஆதாரமான, வடகிழக்கு பருவமழை, நாளை துவங்குகிறது. 'இயல்பான அளவான, 44 செ.மீ., மழை பெய்யலாம். பல மாவட்டங்களில், மழை வெளுத்து வாங்கலாம்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள், வறட்சியில் தத்தளித்த நிலையில், நாட்டின் முக்கிய மழை ஆதாரமாக திகழும், தென்மேற்கு பருவமழை, ஜூனில் துவங்கியது. நான்கு மாதங்களாக நாடு முழுவதும் பரவி, மழையை கொட்டியது. அனைத்து நீர்நிலைகளையும் நிரப்பியதுடன், விவசாயத்துக்கும், குடிநீருக்கும் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்தையும் போக்கியது. நாட்டை செழிப்பின் பாதைக்கு எடுத்துச் சென்ற தென்மேற்கு பருவமழை, இன்றுடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு, மழை ஆர்வலர்கள் பிரியாவிடை கொடுத்துள்ளனர்.

பரவலாக மழை


இதையடுத்து, 'தமிழகத்தின் முக்கிய மழை ஆதாரமான, வடகிழக்கு பருவமழை நாளை துவங்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம், மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னோட்டமான மழை, தமிழகம் முழுவதும் நேற்று துவங்கியது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, ஈரோடு என, தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில், பரவலாக மழை பெய்துள்ளது. நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில், 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இந்த மழை இன்றும் தொடரும் என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அளித்த பேட்டி: இந்திய பெருங்கடலின் பெரும்பாலான பகுதிகளில், தென்மேற்கு பருவ மழை விலகத் துவங்கி விட்டது; இன்றைக்குள் முழுவதும் விலகி விடும். இதைத் தொடர்ந்து, நாளை வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. தமிழகம் மற்றும் தமிழகத்தை ஒட்டிய தெற்கு ஆந்திரா, ராயலசீமா, தெற்கு கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில், நாளை முதல், வட கிழக்கு பருவமழை பெய்யத் துவங்கும்.

சூறைக்காற்று


இன்றைய வானிலையை பொறுத்தவரை, தமிழகத்தின் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில், பல இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. மற்ற இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், இடியுடன் கூடிய திடீர் மழை பெய்யலாம். மன்னார் வளைகுடா, குமரி கடல், லட்சத்தீவு, மாலத்தீவு ஆகிய கடற்பகுதிகளில், சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளது. மணிக்கு, 45 முதல், 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிக்குள், நாளை முதல், இரண்டு நாட்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.

மழை எப்படி இருக்கும்?


ஆண்டுதோறும், அக்டோபர் முதல், டிசம்பர் வரை, வடகிழக்கு பருவமழை பெய்யும். இந்த மழை, இயல்பான அளவில் சராசரியாக, 44 செ.மீ., பெய்ய வேண்டும். 2018ல், 34 சதவீதம் குறைவாக பெய்ததால், தமிழகத்தில், விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த ஆண்டு, ஏற்கனவே, தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்துள்ளதால், வட மாவட்டங்களைத் தவிர, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நீர்நிலைகள் மற்றும் அணைகள் நிரம்பியுள்ளன.

இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் பெய்ய, அதிக வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தனியார் வானிலை கணிப்பாளர்களும், 'இயல்பான மழை பெய்யும்' என, கூறியுள்ளனர்.

அணைகளில் நீர் இருப்பு திருப்தி


தென்மேற்கு பருவமழை முடியவுள்ள நிலையில், பல அணைகளில், நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. மேட்டூர், முல்லை பெரியாறு, பவானிசாகர் உள்ளிட்ட, 15 முக்கிய அணைகள், மொத்தம், 198 டி.எம்.சி., கொள்ளளவு உடையவை. இவற்றின் வாயிலாக மாநிலத்தின் பாசனம், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட தேவைகள் பூர்த்தியாகின்றன. பெரும்பாலான அணைகள், ஜூனில் வறண்டிருந்தன. தென்மேற்கு பருவமழையால், அணைகளுக்கு, ஜூலையில் நீர்வரத்து துவங்கியது. கர்நாடகாவில் திறக்கப்பட்ட நீரும், மேட்டூர் அணைக்கு கிடைத்தது. மழையால், அணைகளின் நீர் இருப்பு தொடர்ந்து உயர்ந்து வந்தது.
தென்மேற்கு பருவமழை இன்று முடிவுக்கு வரவுள்ள நிலையில், பல அணைகளில் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. மேட்டூர் அணையில், அதிக பட்சமாக, 83.8 டி.எம்.சி., - பவானிசாகரில், 25.7; பரம்பிக்குளத்தில், 13.3; சோலையாறு அணையில், 4.97 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.

முல்லை பெரியாறு, வைகை, பாபநாசம், ஆழியாறு அணைகளில் தலா, 3 டி.எம்.சி.,க்கு மேல், நீர் இருப்பு உள்ளது. இவ்வாறு, 15 அணைகளிலும் சேர்த்து மொத்தமாக, 152 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. இந்த நீரை வைத்து, அடுத்தாண்டு கோடைக் கால குடிநீர் தேவையை சமாளிக்க முடியும்.

மூலக்கதை