காஷ்மீரில் போராட்டம் ; பரூக் அப்துல்லா மகள், சகோதரி கைது

தினமலர்  தினமலர்
காஷ்மீரில் போராட்டம் ; பரூக் அப்துல்லா மகள், சகோதரி கைது

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவின் மகள், சகோதரி உள்ளிட்ட பெண்கள், நேற்று கைது செய்யப்பட்டனர்.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, 370வது சட்டப் பிரிவை, மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. இதையடுத்து, அசம்பாவிதங்களை தவிர்க்க, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, காஷ்மீர் முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கண்டனம்

பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்களும், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, அவரது மகன் ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி உள்ளிட்டோர், வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, ஸ்ரீநகரில் நேற்று, பரூக் அப்துல்லாவின் மகள் சபியா, சகோதரி சுரையா உள்ளிட்ட சில பெண்கள், தடையை மீறி, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

'காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும்; கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்; கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்' என, கோஷம் எழுப்பினர். பாதுகாப்பு படையினர், அவர்களை சுற்றி வளைத்தனர். கலைந்து செல்லும்படி, பாதுகாப்பு படையினர் கூறியதை ஏற்க மறுத்து, தரையில் அமர்ந்தபடி போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மீண்டும் பாதிப்பு

காஷ்மீர் முழுவதும், முன் எச்சரிக்கை கருதி, 72 நாட்களாக, மொபைல் போன் மற்றும் இணைய சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் முதல், மொபைல் சேவை மீண்டும் துவங்கியது. இந்நிலையில், மொபைல் போனில் வதந்தியை பரப்பும் வகையில், பொய்யான, எஸ்.எம்.எஸ்.,களை, பலர் அனுப்புவதாக புகார் எழுந்ததால், எஸ்.எம்.எஸ்., சேவை மட்டும், மீண்டும் ரத்து செய்யப்பட்டது. 'இணைய சேவை விரைவில் அளிக்கப்படும்' என, அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பாக்., அத்துமீறலில் பெண் பலி

இந்தியா - பாக்., எல்லையில், ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் வசிக்கும் மக்களை குறிவைத்து, பாக்., படையினர் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், எல்லை பகுதியில் வசித்த பெண் ஒருவர் பலியானார்; கால்நடைகளும் இறந்தன. பாக்., படையினரின் இந்த அத்துமீறலுக்கு, நம் படையினர் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

'பயங்கரவாதத்தை வீழ்த்துவோம்'

ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட உறுதியான நடவடிக்கை. இதன் மூலம், காஷ்மீரில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்பட்டுள்ளது. பாக்., ஆதரவு பயங்கரவாதிகளை ஒடுக்கும் விஷயத்தில், எந்தவிதமான சமரசத்துக்கும் இடம் கிடையாது. பயங்கரவாதத்தை, முழுமையாக வீழ்த்துவோம்.

அமித் ஷா , மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,

மூலக்கதை