வதந்தி பரப்பும் காங்., பிரசாரத்தில் மோடி குற்றச்சாட்டு

தினமலர்  தினமலர்
வதந்தி பரப்பும் காங்., பிரசாரத்தில் மோடி குற்றச்சாட்டு

சண்டிகர் : ''காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து, காங்கிரஸ் தலைவர்கள் வதந்தியை பரப்புகின்றனர். அவர்களுக்கு, ஹரியானா மாநில வாக்காளர்கள், தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்,'' என, பிரதமர் மோடி பேசினார்.

ஹரியானாவில், முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

வாக்குறுதி

இங்கு, வரும், 21ல், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, சராகி தாத்ரி, தனேசர் ஆகிய இடங்களில் நடந்த பிரசார கூட்டங்களில், பிரதமர் மோடி பேசியதாவது: ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு, சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள், நாடு முழுவதும் வதந்தியை பரப்புகின்றனர். சர்வதேச அளவிலும், வதந்தியை பரப்புகின்றனர். காங்கிரஸ் தலைவர்களுக்கு தைரியமிருந்தால், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவை, மீண்டும் அமல் படுத்துவோம் என, தேர்தல் வாக்குறுதி அளிக்க தயாரா?

என் மீது, என்னவிதமான அவதுாறையும் பரப்புங்கள். அந்த அவதுாறு, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அவதுாறாக கூட இருக்கட்டும். எனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். அதேநேரத்தில், நம் நாட்டின் முதுகில் குத்துவதை நிறுத்துங்கள். ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவு, நாட்டின் நலன் கருதியே ரத்து செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியினர் பரப்பும் வதந்திகளை, ஹரியானா மக்கள் முறியடிக்க வேண்டும். இந்த சட்டசபை தேர்தலில், காங்கிரசை தோற்கடிப்பதன் மூலம், அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.

முக்கியத்துவம்

சீன அதிபர் ஸீ ஜின்பிங்கை, சமீபத்தில் சந்தித்தபோது, தங்கல் என்ற ஹிந்தி படத்தை பார்த்ததாகவும், பெண் குழந்தைகளால் எவ்வளவு முக்கியமான செயல்களை செய்ய முடியும் என்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்தார். பெண் குழந்தைகளை பாதுகாக்கும் திட்டத்தை, ஹரியானா மாநிலத்தின் ஒத்துழைப்பு இல்லாமல், மத்திய அரசு செயல்படுத்தியிருக்க முடியாது. ஹரியானா மாநிலத்தில், பெண்களுக்கு மதிப்பும், முக்கியத்துவமும் அளிக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

மூலக்கதை