இந்திய அழைப்பை ஏற்காமல் மவுனம் காக்கும் பாக்.,

தினமலர்  தினமலர்
இந்திய அழைப்பை ஏற்காமல் மவுனம் காக்கும் பாக்.,

புதுடில்லி : எல்லை பாதுகாப்பு படையின் அதிகாரிகள் மட்டத்திலான சந்திப்புக்கு, இந்தியா விடுத்த அழைப்புக்கு, பாகிஸ்தான் தரப்பில், இதுவரை பதில் அளிக்கப்படவில்லை.

பாதுகாப்பு

இந்தியா - பாக்., இடையிலான சர்வதேச எல்லை பகுதிகளை பாதுகாக்கும் பணிகளை, இரு நாடுகளைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் செய்து வருகின்றனர். இந்திய தரப்பு வீரர்கள், பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை பாதுகாப்பு படையினர் என்றும், பாக்., தரப்பு வீரர்கள், 'ரேஞ்சர்ஸ்' என்றும் அழைக்கப்படுகின்றனர். எல்லையில் அமைதியையும், ஒற்றுமையையும் நிலைநாட்டும் பொருட்டு, இருநாட்டு எல்லை பாதுகாப்பு படையின் உயர் அதிகாரிகள் சந்திப்பு, ஆண்டுக்கு இரு முறை நடந்து வருகிறது.

அழைப்பு


இதில், கமாண்டர்கள் மற்றும் இயக்குனர்கள் மட்டத்திலான அதிகாரிகள் கலந்து கொள்வர். இந்நிலையில், வழக்கமான சந்திப்பை, அக்டோபரில் நடத்த, இந்தியா தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், இந்தியா - பாக்., இடையிலான உறவில், பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து, அக்டோபரில் நடைபெற வேண்டிய சந்திப்பில் கலந்து கொள்வது குறித்து, பாக்., தரப்பில் இருந்து இதுவரை பதில் அளிக்கப்படவில்லை.

மூலக்கதை