பாக்., சிதறி விடும் என கூறுவதா? ராஜ்நாத்துக்கு கண்டனம்

தினமலர்  தினமலர்
பாக்., சிதறி விடும் என கூறுவதா? ராஜ்நாத்துக்கு கண்டனம்

இஸ்லாமாபாத்: 'பயங்கரவாதத்தை ஒடுக்காவிட்டால், பாகிஸ்தான் துண்டு துண்டாக உடைந்து விடும் என, இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதை கடுமையாக கண்டிக்கிறோம்' என, பாக்., தெரிவித்துள்ளது.


ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங், சமீபத்தில், ஹரியானாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது, 'பயங்கரவாதிகளை ஒடுக்காமல், அவர்களுக்கு ஆதரவு அளித்தால், பாகிஸ்தான், பல துண்டுகளாக சிதறுவதை, யாரும் தடுக்க முடியாது. காஷ்மீர் விஷயத்தை, பாகிஸ்தான் மறந்து விட வேண்டும்' என்றார்.


இதற்கு, கண்டனம் தெரிவித்து, பாக்., வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா - பாக்., இடையே, ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவுகிறது. இதுபோன்ற நேரத்தில், இந்தியாவின் மூத்த அமைச்சர் ஒருவர், வன்முறையை துாண்டும் வகையில் பேசுவது, மிகவும் கண்டனத்துக்குரிய செயல். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒருவர், அண்டை நாட்டுக்கு சவால் விடுக்கும் வகையில் பேசுவதை, சர்வதேச நாடுகள் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

அதேநேரத்தில், பாகிஸ்தானின் உள் விவகாரத்துக்கு ஏதாவது பதிப்பு ஏற்பட்டால், எந்தவிதமான சவாலையும் சந்திக்க, ராணுவ வீரர்களும், மக்களும் தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை