டாஸ்மாக் கடைகளில் பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம்: அதிகாரிகளுக்கு நிர்வாகம் அறிவுறுத்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டாஸ்மாக் கடைகளில் பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம்: அதிகாரிகளுக்கு நிர்வாகம் அறிவுறுத்தல்

சென்னை: டாஸ்மாக் கடைகளில் தீ தடுப்பு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளது.

இந்த கடைகள் பெரும்பாலும் முறையாக பராமரிக்கப்படாமல் அசுத்தமாக உள்ளது. கடைகளில் தீ விபத்து ஏற்பட்டால் அதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ தடுப்பு உபகரணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த நடைமுறையை யாரும் பின்பற்றுவதில்லை என்ற புகார் டாஸ்மாக் தலைமை அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளது. தொடர் புகார்களை தொடர்ந்து அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கண்டிப்பாக தீ தடுப்பு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இருக்க வேண்டும்.

இதை கடைகளில் ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: டாஸ்மாக் கடைகளில் தீ தடுப்பு உபகரணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. ஆனால், பெரும்பாலான கடைகளில் இந்த நடைமுறையை ஊழியர்கள் முறையாக பின்பற்றுவதில்லை.

அட்டை பெட்டிகள், மதுபானங்கள் கடைகளில் உள்ளபோது அவற்றில் தீ பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, இதுகுறித்த புகார்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து நிர்வாகத்திற்கு வந்தது.

அதன்படி, அனைத்து மாவட்ட மேலாளர்கள் மற்றும் முதுநிலை மண்டல மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், டாஸ்மாக் கடைகளில் ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகள், கடைகளில் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா என்பதை கண்டிப்பாக ஆய்வு செய்ய வேண்டும்.

குறிப்பாக, தீ அணைக்கும் கருவி, தண்ணீர் வாளி உள்ளிட்டவை இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

20 நாட்களுக்கு ஒரு முறை இதுபோன்ற ஆய்வை சுழற்சி முறையில் மேற்கொள்ள வேண்டும். ஆய்வு குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறு டாஸ்மாக் அதிகாரி கூறினார்.

.

மூலக்கதை