தீபாவளி நெருங்கும் நிலையில் பட்டாசு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை: உச்சநீதிமன்றம் மறுப்பு

தினகரன்  தினகரன்
தீபாவளி நெருங்கும் நிலையில் பட்டாசு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை: உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: பட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க இயலாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தீபாவளி நெருங்கும் இந்த சூழலில் பட்டாசு வழக்கை விரைவாக விசாரிக்கக்கோரி பட்டாசு உற்பத்தியாளர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர். கடந்த ஆண்டு பட்டாசு வெடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை உச்சநீதிமன்றம் விதித்தது. அதில், 2 மணி நேரத்திற்கு மேலாக பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. காலை, மாலை என குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பசுமை பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை உச்சநீதிமன்றம் விதித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்கள் மற்றும் அமைப்புகளில் இருந்து நூற்றுக்கணக்கான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்கிரி ஓய்வு பெற்றதால், வழக்கு எஸ்.கே பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கக்கூடிய சூழ்நிலையில் இந்த பட்டாசு தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதில், பசுமை பட்டாசுகளை தயாரித்துள்ளதாகவும், வெடிப்பதற்கான கால நேரத்தை தளர்வு செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி எஸ்.கே.பாப்டே, அயோத்தி வழக்கு தொடர்பாக அரசியல் சாசன அமர்வில் உள்ளார். இன்னும் 3 நாட்களுக்கு அயோத்தி வழக்கு விசாரணை நடக்கவுள்ளது. அதன் பிறகே அவருக்கு பட்டியலிடப்பட்ட வழக்குகளை விசாரிப்பார் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், பட்டாசு வழக்கை வேறொரு வழக்கறிஞர் விரைவில் விசாரிக்க கோரி மற்றொரு நீதிபதியான என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் அதற்கான எந்த ஒரு இறுதி முடிவையும் வழங்கவில்லை. பட்டாசு வழக்கு பட்டியலிடப்பட்டால் அதற்கு சம்மந்தப்பட்ட நீதிபதி விசாரிப்பார் எனக் கூறி அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

மூலக்கதை