சென்னை பெரும்பாக்கம் டாஸ்மாக்கில் 2 பேர் உட்பட தமிழகத்தில் ஒரே நாளில் 6 பேர் படுகொலை: ரவுடிகள் அட்டகாசம் அதிகரிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சென்னை பெரும்பாக்கம் டாஸ்மாக்கில் 2 பேர் உட்பட தமிழகத்தில் ஒரே நாளில் 6 பேர் படுகொலை: ரவுடிகள் அட்டகாசம் அதிகரிப்பு

சென்னை: சென்னையில் டாஸ்மாக் பாரில் நடந்த மோதலில் 2 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலைகள் உட்பட தமிழகம் முழுவதும் 6பேர் ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்டனர்.

கடந்த சில நாட்களாக ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாகவும், குற்றவாளிகளுடன் போலீசார் கூட்டு சேர்ந்ததால், குற்றங்கள் அதிகரிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சென்னை வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம், இந்திரா நகரை சேர்ந்தவர் ஆனந்த் (29).

லாரி கிளீனர். இவரது உறவினர் ஸ்டீபன் (23).

ஆட்டோ டிரைவர். இவர்கள் இருவரும் நேற்றிரவு அதே பகுதியில் ஆனந்தா நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் மது குடிக்க ஆட்டோவில் சென்றனர்.

பின்னர் இருவரும் மது வாங்கி, பாருக்குள் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 பைக்குகளில் 6 பேர் கும்பல் வந்திறங்கியது.

அங்கு மது குடித்து கொண்டிருந்த ஆனந்த், ஸ்டீபன் ஆகிய இருவரிடமும் வாய்த்தகராறில் ஈடுபட்டது. இருதரப்பிலும் வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து, அக்கும்பல் பட்டாக்கத்தியால் இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது.

இதுகுறித்து தகவலறிந்ததும் பள்ளிக்கரணை போலீசார் விரைந்து வந்தனர்.

அங்கு படுகாயம் அடைந்த இருவரையும் சோதித்தபோது, சம்பவ இடத்திலேயே ஸ்டீபன் பரிதாபமாக பலியானது தெரியவந்தது. மேலும், படுகாயம் அடைந்த ஆனந்த்தை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆனந்த் பரிதாபமாக பலியானார். இருவரின் சடலங்களை போலீசார் கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் நடந்த கோயில் திருவிழாவில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட அடிதடி தகராறுதான் இக்கொலைகளுக்கு காரணம் எனத் தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை அமைத்து, கொலை கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். குற்றவாளிகள் கைதுக்கு பின்னரே கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தகவல் கூறுகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மர்ம உறுப்பை அறுத்து கொலை

மதுரை சிட்டாலாட்சி நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (44). ரியல் எஸ்டேட் அதிபர்.

இவரது மனைவி சுபா (40). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

5 ஆண்டுகளுக்கு முன்பு சுபா தனது கணவர், குழந்தைகளை விட்டு விட்டு ஆட்டோ டிரைவர் பிரகாஷ் என்பவருடன் சென்று விட்டார். இதனால், ரஞ்சித்குமார் கோமதி என்ற பெண்ணை சேர்த்து வைத்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரகாஷ் மற்றும் பாப்ளி உள்பட 4 பேர், ரஞ்சித்குமார் வீட்டுக்கு வந்தனர். கோமதி மற்றும் குழந்தைகளுடன் ரஞ்சித்குமார் பேசி கொண்டிருந்தார்.

அப்போது அவர்கள், “சுபாவுக்கு பயன்படாத உறுப்பு, உனக்கு எதுக்குடா? இத்தோடு ெசத்துப் போ” எனக்கூறி, ரஞ்சித்குமாரின் மர்ம உறுப்பை கத்தியால் அறுத்து துண்டித்தனர். பின்னர் அவரது தலை, மார்பு உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பினர்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ரஞ்சித்குமாரை, 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

பழவியாபாரி, மனைவி கொலை

நாமக்கல் அருகேயுள்ள வீசானம் காமராஜர் நகரை சேர்ந்தவர் விமல்ராஜ் (27).

பழ வியாபாரி. இவரது மனைவி அனிதா (23).

இவர்களுக்கு 7 மாத கைக்குழந்தை உள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு இவர்களின் வீட்டுக்கு வந்த மர்மநபர்கள் விமல்ராஜ், அவரது மனைவி அனிதா, அனிதாவின் தந்தை கருப்பசாமி ஆகிய 3 பேரையும் அரிவாளால் சரமாரி வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் அனிதா, விமல்ராஜ் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நாமக்கல் போலீசார் இருவரின் உடலை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்த கருப்பசாமியை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தனிப்படை போலீசார் நேற்று இரவு விமல்ராஜ், அனிதா உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது தெரியவந்துள்ளது.

அமைச்சர் உதவியாளர் உறவினர் கொலை

புதுக்கோட்டை அடப்பன்வயல் 3ம் வீதியை சேர்ந்தவர் வினோத்சக்கரவர்த்தி (35).

இவர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் அன்பானந்தத்தின் உறவினர். இவர் நேற்றிரவு தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அரிவாளால் வினோத்சக்கரவர்த்தியை சரமாரியாக வெட்டி கொன்று விட்டு தப்பினர். இவ்வாறு தமிழகத்தில் ஒரேநாளில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

கடந்த சில மாதங்களாகவே ரவுடிகளின் அட்டகாசம் அதிகரிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதற்கு காரணம் ரவுடிகள், குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகளுடன் போலீசார் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

அதன்மூலம் தங்களை வளப்படுத்தி வருகின்றனர். இதனால்தான் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.



ஒரு போலீஸ்காரரை மாற்ற வேண்டும் என்றால் கூட, அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களிடம் அனுமதி பெற்ற பிறகுதான் மாற்றும் சூழ்நிலை உள்ளது. உள்ளூர் போலீசார், ஒரு வழக்குப்பதிவு செய்வதற்கு கூட அமைச்சரிடமோ, அவரது உதவியாளரிடமோ அனுமதி பெற வேண்டிய சூழ்நிலை தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

அதற்கு காரணம், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை கலெக்டர்களாகவும், மாவட்ட எஸ்பிக்களாகவும் போட்டுள்ளனர். இதனால்தான் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களுக்கு அதிகாரிகள் கட்டுப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது போலீசாரே குற்றவாளிகளுடன் கைகோர்த்து செல்ல வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இதனால்தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

.

மூலக்கதை