வாடகையை உயர்த்தக்கோரி ஆவின் பால் டேங்கர் லாரிகள் நாளை முதல் வேலைநிறுத்தம்: பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வாடகையை உயர்த்தக்கோரி ஆவின் பால் டேங்கர் லாரிகள் நாளை முதல் வேலைநிறுத்தம்: பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

நாமக்கல்: தமிழகம் முழுவதும், வாடகையை உயர்த்தி வழங்கக்கோரி பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் நாளை (16ம் தேதி)  முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் பால் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாமக்கல்லில் ஆவின் நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பால் டேங்கர் லாரிகளை இயக்கும் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்  நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பின் நாமக்கல்லை சேர்ந்த ஒப்பந்ததாரர் சுப்ரமணி, நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 15 ஆவின் ஒன்றியங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் 285 பால் டேங்கர் லாரிகளை  55 ஒப்பந்ததாரர்கள் இயக்கி வருகிறோம்.

தினமும் 30 லட்சம் லிட்டர் பால், ஆவின் நிறுவனத்துக்கு டேங்கர் லாரிகள் மூலம் கிராமப்புறங்களில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது.

இதேபோல, பால் குளிரூட்டும் நிலையத்துக்கும் டேங்கர் லாரிகளில் பால் ஏற்றி செல்கிறோம். சென்னைக்கு மட்டும் தினமும் 12 லட்சம் லிட்டர் பால், டேங்கர் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள டெண்டர், கடந்த ஆண்டுடன் முடிந்து விட்டது. இதையடுத்து, வாடகை உயர்த்தி தரக்கோரி, ஆவின் நிறுவன அதிகாரிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினோம்.

இந்த நிலையில், கடந்த 10ம் தேதி புதிய டெண்டர் நடத்தப்படும் என அறிவிக்கப்படது. இதில் 65 ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டோம்.

ஆனால் அறிவித்தபடி டெண்டரை நடத்தவில்லை. அதற்கான காரணமும் முறையாக தெரிவிக்கவில்லை.

எனவே, ஆவின் நிறுவனம் வாடகையை உயர்த்தி தரக்கோரி, நாளை (16ம் தேதி) முதல் பால் டேங்கர் லாரிகளை நிறுத்தி, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதனால் தமிழகம் முழுவதும் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும்.

இவ்வாறு சுப்ரமணி கூறினார்.

.

மூலக்கதை