முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஜெயந்தி தினம்: புது முறையில் ட்விட்டரில் மோடி மரியாதை

தமிழ் முரசு  தமிழ் முரசு
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஜெயந்தி தினம்: புது முறையில் ட்விட்டரில் மோடி மரியாதை

புதுடெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு, அப்துல் கலாம் ஜெயந்தி தினம் என்று குறிப்பிட்டு, புதிய முறையில்  பிரதமர் மோடி வாழ்த்தி மரியாதை செய்தார். நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 88வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

ராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவில்  வசிக்கும் ஜெயினாலுபுதீன் - ஆஷியம்மாளுக்கு 7வது மகனாக பிறந்த அப்துல் கலாம், தனது அசாத்திய திறமையாலும் கடின உழைப்பாலும்  ஏவுகணை விஞ்ஞானியாக உயர்ந்தார். படகோட்டியின் மகன், பண்பாளர், ஏவுகனை விஞ்ஞானி, மக்கள் ஜனாதிபதி, சிறந்த நிர்வாகி, குழந்தைகளின்  ரோல்மாடல் என பல பரிமாணங்களை கொண்டிருந்தார்.



தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் ஆரம்ப கல்வி, திருச்சி, ராமநாதபுரத்தில் மேற்படிப்பு, சென்னை எம்ஐடியில் விமான தொழில்நுட்ப கல்வி முடித்து  விஞ்ஞானி ஆனார். இவருடைய சாதனைகளால் பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற பல்வேறு விருதுகளை பெற்றார்.

மேலும், நாட்டின் உயரிய  விருதான பாரத ரத்னா விருதையும் பெற்றார். 2002ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி நாட்டின் 11வது ஜனாதிபதியாக பதவியேற்றார்.

2015ம் ஆண்டு,  ஜூலை 27ம் நாள் ‘அருமை மாணவர்களே’ என்ற இறுதிச் சொற்களுடன் அவரின் உயிர் பிரிந்தது. மாணவர்களுக்காக வாழ்ந்த கலாமை கவுரவிக்கும் விதமாக, 2011ம் ஆண்டு அப்துல் கலாம் பிறந்தநாளை இனி உலக மாணவர்கள் தினமாக  கொண்டாட ஐ. நா சபை அறிவித்தது.

இந்நிலையில் இன்று அப்துல்கலாமின் பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

குடியரசு தலைவர்  ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலாம் பிறந்த நாள் குறித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

பொதுவாக தலைவர்கள்  பிறந்த நாளை ‘பிறந்த நாள் வாழ்த்து’ என்று தெரிவிக்கும் வழக்கம் உள்ளது. மகாத்மா காந்திக்கு மட்டும், காந்தி ஜெயந்தி என்று குறிப்பிடப்படும்.

மோடி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அப்துல் கலாமுக்கு பிறந்த நாள் விழாவில் மரியாதை செய்கிறேன். அவர் 21ம் நூற்றாண்டின் திறமையான  இந்தியாவைப் பற்றி கனவு கண்டார்.

அவரது இலட்சிய வாழ்க்கை எப்போதும் நாட்டு மக்களுக்கு ஊக்கமளிக்கும்.

அப்துல் கலாமின் ஜெயந்திக்கு  இந்தியா வணக்கம் செலுத்துகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

.

மூலக்கதை