வீடு கட்டித்தருவதாக ஏமாற்றினார்: நடிகை மஞ்சுவாரியர் மீது ஆதிவாசிகள் புகார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வீடு கட்டித்தருவதாக ஏமாற்றினார்: நடிகை மஞ்சுவாரியர் மீது ஆதிவாசிகள் புகார்

திருவனந்தபுரம்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்களுக்கு வீடு கட்டித்தருவதாக கூறி நடிகை மஞ்சுவாரியர் ஏமாற்றிவிட்டதாக ஆதிவாசி கோத்ர மகாசபை  என்ற அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மஞ்சுவாரியர்.

சமீபத்தில் தமிழில் வெளியான அசுரன் படத்தில் தனுஷுடன் நடித்துள்ளார்.   கேரளாவில் தனது பெயரில் ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் வயநாடு மாவட்டம் பனமரம் பஞ்சாயத்தில்  உள்ள பரக்குனி ஆதிவாசி காலனியில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.

இதையடுத்து 57 பேருக்கு இலவமாக வீடு கட்டித்தருவதாகவும், அவர்களுக்கு ேதவையான வசதிகளை அறக்கட்டளை மூலம் செய்து தருவதாகவும்  மஞ்சுவாரியர் வாக்குறுதி அளித்தார். அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.   இதையடுத்து பனமரம் பஞ்சாயத்து  உறுப்பினர் ஒருவர் வயநாடு மாவட்ட லீகல் சர்வீஸ் அதாரிட்டியில் ஒரு புகார் மனு அளித்தார்.



அதில், மஞ்சு வாரியார் 57 குடும்பத்தினருக்கு வீடு கட்டி தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆகவே அரசு சார்பில் அவர்களுக்கு உதவிகள்  வழங்கவில்லை.

தற்போது அவரும் வீடு கட்டிக்கொடுக்கவில்லை. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது  தொடர்பாக விளக்கம் கேட்டு மஞ்சுவாரியரின் அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு மஞ்சுவாரியர் சார்பில் அளிக்கப்பட்ட பதிலில்,தனிப்பட்ட அமைப்பு என்ற முறையில் ஒரு வரைமுறைக்கு மேல் எங்களால் உதவி செய்ய  முடியாது.

இதுவரை ₹3. 5 லட்சத்திற்கு அந்த ஆதிவாசி காலனிக்கு உதவிகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக ₹10 லட்சம் வரை மட்டுமே அளிக்க  முடியும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக கேரள ஆதிவாசி கோத்ர மகாசபை தலைவர் கீதானந்தன் மற்றும் நிர்வாகிகள் எர்ணாகுளத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: பரக்குனி  ஆதிவாசி காலனியை சேர்ந்த 57 பேருக்கு வீடுகள் கட்டித்தருவதாக கூறி மஞ்சுவாரியர் அறக்கட்டளை ஏமாற்றிவிட்டது. அவர்கள் வாக்குறுதி  அளித்ததால் அந்த பகுதியினருக்கு அரசு சார்பிலும் உதவிகள் கிடைக்கவில்லை.   இந்த திட்டத்திற்கு ₹2. 5 கோடி செலவு வரும்.

₹13. 5 லட்சம் மட்டுமே தந்து மக்களை ஏமாற்ற பார்க்கின்றனர். இது தொடர்பாக அறக்கட்டளை மீது  அரசு நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதாக கூறி வேறு யாரிடம் இருந்தாவது பணம் வாங்கினாரா? என்பது குறித்தும்  அரசு விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை