கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 25ம் தேதி முதல் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: மாநில நிர்வாகி தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 25ம் தேதி முதல் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: மாநில நிர்வாகி தகவல்

சேலம்: அரசு மருத்துவர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.   50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.   கலந்தாய்வு மூலம் பணி ஆணை பிறப்பிக்க வேண்டும். நோயாளிகளுக்கு சமமாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட  கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
இதற்காக ஜூலை மாதம் தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை உண்ணாவிரதம், கருப்பு பேட்ஜ் அணிவது, தர்ணா, புறநோயாளிகள் சிகிச்சை  புறக்கணிப்பது, மனித சங்கிலி போராட்டம் மற்றும் ஒத்துழையாமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு வகையான போராட்டங்களில் மருத்துவர்கள்   ஈடுபட்டனர்.

இதனையடுத்து அரசு மருத்துவர்கள் சங்கத்துடன் சுகாதார துறை அமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை  பரிசீலனை செய்ய அரசு,  ஐஏஎஸ் அதிகாரியை நியமனம் செய்தது. மேலும், கோரிக்கைகள் தொடர்பாக 6 வாரத்திற்குள் உரிய தீர்வு அளிக்கப்படும் என  அரசு உறுதியளித்தது.

இதனை தொடர்ந்து அரசு மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால், தற்போது வரை மருத்துவர்களின் கோரிக்கைகள்  நிறைவேற்றப்படவில்லை.

இதனால், அரசு மருத்துவர்கள் சங்க செயற்குழு கூட்டத்தை கூட்டி அடுத்த கட்டமாக தொடர் வேலை நிறுத்த போராட்டம்  நடத்த   திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஜனநாயக அரசு மருத்துவர்கள் சங்க மாநில செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது: அரசு மருத்துவர்களுக்கான காலம் சார்ந்த  பதவி உயர்வு, ஊதிய உயர்வு, 50 சதவீத இடஒதுக்கீடு, கலந்தாய்வு மூலம் பணி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு  வகையான போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், ஜனநாயக அரசு டாக்டர்கள் சங்கம்,  மருத்துவ அலுவலர்கள் சங்கம் என பல மருத்துவர் சங்கங்களை ஒன்றிணைத்து தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டது.

இதையடுத்து ஐஏஎஸ் அதிகாரி செந்தில்ராஜ் தலைமையில் ஆய்வு நடத்தி, 6 வாரத்தில் உரிய தீர்வு காணப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.   ஆனால் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனை தொடர்ந்து அனைத்து அரசு மருத்துவர்களும் ஒன்றிணைந்து வரும் 25ம்  தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு செந்தில்குமார் கூறினார்.

.

மூலக்கதை