பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியின் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியின் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

புதுடெல்லி: பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி நிறுவனத்துடன், தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. அபிஜித்திற்கு  முன்னாள் பிரதமரும் பொருளாதார வல்லுனருமான மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகின் உயரிய பரிசாக கருதப்படும் நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தாண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூன்று  பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் கிரேமர் மற்றும் அபிஜித் பானர்ஜி ஆகிய மூன்று பேருக்கு இந்தப் பரிசு  அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள், உலக வறுமையை போக்குவது தொடர்பான ஆய்வை நடத்தியதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில்,  இந்தியாவின் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்தவர் அபிஜித் பானர்ஜி. தற்போது அமெரிக்காவில் குடியேறி அந்த நாட்டின் குடியுரிமையை  பெற்றுள்ளார்.

இந்நிலையில், அபிஜித் பானர்ஜிக்கு இந்தியா மற்றும் உலகின் பல்வேறு தலைவர்களும் வாழ்த்து கூறி வரும் நிலையில், பொருளாதார வல்லுனரான  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:  பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெறும் இரண்டாவது இந்தியர் நீங்கள் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

அத்துடன் உங்களது  மனைவி எஸ்தர் டஃப்லோவும் நோபல் பரிசு பெற்றது மேலும் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. வறுமை ஒழிப்பிற்காக நீங்கள் நடத்திய ஆய்வுப்  பணிகள் மிகவும் சிறப்பானது.

அதன்படி, சில புதிய முறைகள் வறுமை ஒழிப்பிற்கு மிகவும் முக்கியமானது. வளர்ச்சி சார்ந்த பொருளாதார ஆய்வுகளை  அங்கீகரித்து நோபல் பரிசு வழங்கப்பட்டது ஒரு பொருளாதார மாணவராக எனக்கு பெரும் இன்பத்தை தந்துள்ளது.

உங்களுடைய எதிர்கால ஆய்வுப்  பணிகளும் வெற்றி அடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவியான டாஃப்லோ ஆகியோரால் நிறுவப்பட்ட அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை  நடவடிக்கை ஆய்வகம் (ஜே-பிஏஎல்), பொருளாதாரம் தொடர்பாக கொள்கை முன்னுரிமைகளை அடையாளம் காணவும், புதுமையான தீர்வுகளை  கொண்டு வரவும் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

தற்போதைய அல்லது புதிய திட்டங்களை மதிப்பீடு  செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் திறனை வளர்ப்பதில் ‘ஜே-பிஏஎல்’ தமிழக அரசிற்கு உதவுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2014 செப்டம்பரில் ‘ஜே-பிஏஎல்’ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவதாக அறிவித்தார்.

அதன்பின் 2  மாதம் கழித்து அப்போதைய அமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் ‘ஜே-பிஏஎல்’ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.   தலைமை செயலகத்தில் கையெழுத்திட்ட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது, டஃப்லோ கலந்து கொண்டார்.

குறிப்பாக, சுகாதாரம், கல்வி,  தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு, சமூக நலன் மற்றும் சத்தான உணவு திட்டம், வணிக வரி ஆகிய ஏழு  அரசு துறைகளுடன் ‘ஜே-பிஏஎல்’ இணைந்து செயல்படுகிறது.

.

மூலக்கதை