பிரதமருக்கு வரவேற்பு அளித்த விவகாரம்: பாஜகவில் மீண்டும் வெடித்தது சர்ச்சை

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிரதமருக்கு வரவேற்பு அளித்த விவகாரம்: பாஜகவில் மீண்டும் வெடித்தது சர்ச்சை

சென்னை: பிரதமருக்கு வரவேற்பு அளித்த விவகாரத்தில் பாஜகவில் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. பொன். ராதாகிருஷ்ணனுக்கு எதிராக எச். ராஜாவும்   போர்க்கொடி தூக்கியுள்ளதால் கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங்கின் சந்திப்பு கடந்த 11, 12ம் தேதி என இரண்டு நாட்கள்  நடைபெற்றது. 11ம் தேதி பிற்பகல் சென்னை வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும்  பாஜக சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பாஜக சார்பில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பொன். ராதாகிருஷ்ணன், இல. கணேசன், எச். ராஜா, கேசவ  விநாயகம், சி. பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் சென்னை கோட்டத்தை சார்ந்த நிர்வாகிகளுக்கு தான்  முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

ஆனால், வரவேற்பு நிகழ்ச்சியில் சென்னை கோட்டத்தில் உள்ள பொறுப்பாளர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டனர். அது மட்டுமல்லாமல் தலைவர்  பதவிக்காக போட்டியிடுபவர்களும் புறக்கணிக்கப்பட்டதாக கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்தவர்களும், கட்சியில் முக்கிய பதவியில் இருந்தவர்களும்  கடுமையாக குற்றம் சாட்டினர்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தான் இது போன்று மற்றவர்களை புறக்கணித்ததாகவும், குறிப்பாக தமிழிசையின்  ஆதரவாளர்களாக இருந்தவர்கள் அனைவரும் புறக்கணிக்கப்பட்டார்கள் என்று பாஜக நிர்வாகிகள் குற்றம் சாட்டி வந்தனர்.

இது தொடர்பாக கட்சியின்  தேசிய தலைவர் அமித்ஷாவுக்கும், செயல் தலைவர் ஜே. பி. நட்டாவுக்கும் தமிழிசை ஆதரவாளர்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட தலைவர் புகார் கடிதம்  எழுதியுள்ளனர்.

இந்த பரப்பு அடங்குவதற்குள் தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவாளர்களுக்கு ஆதரவாக பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவும் போர்க்கொடி  தூக்கியுள்ளவர். அவர் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகத்திடம், “ தமிழக பாஜகவுக்கு தற்போது தலைவர் நியமிக்கப்படவில்லை.

தலைவர்  இல்லாத நிலையில் எந்த முடிவை எடுத்தாலும் பாஜகவின் உயர்மட்ட குழுவை கூட்டி தான் முடிவு செய்ய வேண்டும். அப்படியிருக்கும் போது  பிரதமருக்கு வரவேற்பு கொடுப்பவர்களுக்கான பட்டியலை எப்படி நீங்களும், பொன். ராதாகிருஷ்ணனும் தயாரித்து வழங்கினீர்கள்.

பிரதமர் சென்னைக்கு  வந்துள்ளார். அப்படியிருக்கும் போது வரவேற்பு நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள கோட்ட பொறுப்பாளர்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்க  வேண்டும்.

இது தான் கட்சியின் நடைமுறை.

ஆனால், வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களை எப்படி வரவேற்பு பட்டியலில் பெயரை சேர்த்தீர்கள் என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதாக  கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக நானே மேலிடத்தில் நேரடியாக புகார் அளிப்பேன் என்றும் எச். ராஜா அப்போது எச்சரித்ததாகவும்  கூறப்படுகிறது.

தமிழிசை ஆதரவாளர்களும், எச். ராஜாவும் பொன். ராதாகிருஷ்ணனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது கட்சியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. பாஜக தேசிய தலைவர்கள் அனைவரும் மகாராஷ்டிரா, அரியானா தேர்தல் பிரசாரத்தில் இருந்து வருகின்றனர்.

அங்கு தேர்தல்  முடிந்ததும் இது தொடர்பாக நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது.

.

மூலக்கதை