செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அனுமதி: பொதுமக்கள் பீதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அனுமதி: பொதுமக்கள் பீதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நாள்தோறும் புறநோயாளியாக 8 ஆயிரம் பேரும், உள்நோயாளியாக 5 ஆயிரம் பேரும் சிகிச்சை பெற்று  வருகின்றனர். இங்கு அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பதால், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து ஏராளமான  மக்கள் பயன் பெற்று வருகின்றனர்.
 கடந்த 3 வாரங்களாக டெங்கு காய்ச்சல் காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பெண்கள், குழந்தைகள் என 100-க்கும் மேற்பட்டோர்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 2 வாரங்களுக்கு முன் கல்பாக்கத்தை சேர்ந்த செல்லம்மாள் என்பவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் உறுதி  செய்யப்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுப்பி வைக்கப்பட்டார்.

இதேபோல், கடந்த 5 நாட்களுக்கு முன் காஞ்சிபுரம் அடுத்த வயலக்காவூரை சேர்ந்த கீர்த்தனா என்ற 4-ம் வகுப்பு சிறுமி செங்கல்பட்டு அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, டெங்கு காய்ச்சல் அதிகமாகி உயிரிழந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் செங்கல்பட்டு அடுத்த பழையசீவரம்  கிராமத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் பிரவீன்குமார் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார். கடந்த 3 வாரங்களாக காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட மதுராந்தகம், செங்கல்பட்டு, கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், செய்யூர், அச்சிறுப்பாக்கம்,  திருப்போரூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்த டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் பலியானதால்  பொதுமக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் நகராட்சி,  பேரூராட்சி அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.   டெங்கு  காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க தடுப்பு மருந்து, பிளிச்சிங் பவுடர், குளோரின் பவுடர், கழிவுநீர் கால்வாய்களை  தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
டெங்கு காய்ச்சலுக்கு மாணவர்கள் மட்டுமே பெருமளவு பலியாகி வருகின்றனர். எனவே, அனைத்து பள்ளிகளிலும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு,  காய்ச்சலை தடுக்க நிலவேம்பு கசாயம் உட்பட பல்வேறு சுகாதார பணிகளை பள்ளி கல்வித்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என சமூக  ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்

இதுகுறித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஒரு மாதமாக டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக, டெங்கு காய்ச்சல் தடுப்பு தனி வார்டு உருவாக்கப்பட்டு உள்ளது.

கொசுவலையுடன் 60 படுக்கைகள் தயாராக உள்ளது. அங்கு 24  மணி நேரமும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தற்போது பல்வேறு பகுதிகளில் இருந்து காய்ச்சல் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு வருவதால், கூடுதலாக படுக்கைகள்  ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால், அவர்களை மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது  மருத்துவமனைக்கும் குழந்தைகளை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்து வருகிறோம் என்றனர்.

.

மூலக்கதை