புதுச்சேரி அருகே மீனவர்களிடையே ஏற்பட்ட மோதல்: இரு கிராமங்களை சேர்ந்த 600 மீனவர்கள் மீது வழக்குப்பதிவு

தினகரன்  தினகரன்
புதுச்சேரி அருகே மீனவர்களிடையே ஏற்பட்ட மோதல்: இரு கிராமங்களை சேர்ந்த 600 மீனவர்கள் மீது வழக்குப்பதிவு

புதுச்சேரி: புதுச்சேரி அருகே நடுக்கடலில் மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இரு கிராமங்களை சேர்ந்த சுமார் 600 மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நல்லவாடு, வீராம்பட்டிணம் கிராம மீனவர்களிடையே சுருக்குவலை பயன்படுத்துவது தொடர்பாக மோதல் போக்கு அவ்வப்போது நீடித்து வந்தது. இதில் நல்லவாடு மீனவர்கள் வைத்திருந்த வலையை வீராம்பட்டிணம் மீனவர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதனால், இரு கிராமங்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதையொட்டி, அந்தப் பகுதியில் இரு மாநில போலீஸார் குவிக்கப்பட்டு, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மோதல் தடுக்கப்பட்டது. இந்த நிலையில் திங்கள் அன்று நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கரைக்கு திரும்பிய மீனவர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் இருவர் காயமடைந்தனர். தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சியில் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது தொடர்பாக இரு கிராமங்களில் இருந்தும் தலா 300 மீனவர்கள் மீது தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக இரு கிராமங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோதலில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கவும், அமைதியை நிலைநாட்டவும் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பாகவும் வழக்குப் பதியப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, மோதலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதற்காக அரியாங்குப்பம், தவளக்குப்பம் போலீஸார் இரு கிராமங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூலக்கதை