ஆன்லைனில் தகவல் அறியும் உரிமைக்கான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மேலும் 4 வாரம் அவகாசம் வழங்கி உத்தரவு

தினகரன்  தினகரன்
ஆன்லைனில் தகவல் அறியும் உரிமைக்கான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மேலும் 4 வாரம் அவகாசம் வழங்கி உத்தரவு

புதுடெல்லி: ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து தகவல் பெறுவதற்கு வசதியாக ஒரு இணைய பக்கம் ஒன்றை உருவாக்குவது குறித்து பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் மேலும் 4 வாரம் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் கடந்த ஆகஸ்டு மாதம் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தது. அதில், தகவல் அறியும் உரிமை சட்டம் ஒரு வலுவான ஆயுதம் எனவும், இதனை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து தகவலை பெறுவதற்கு வசதியாக ஒரு இணைய பக்கத்தை உருவாக்க வேண்டும் எனவும் கூறியிருந்தது. மேலும் இதன் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்களும் எளிதாக தகவலை அறிய முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.வி ரமணா, சஞ்சீவ் கண்ணா, கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு மத்திய அரசும், டெல்லி மகாராஷ்டிரா தவிர்த்த 25 மாநில அரசுகளும் இந்த மனுவுக்கு உரிய பதிலளிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் அதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அச்சமயம் இதுவரை  பதிலளிக்காத மத்திய மாநில அரசுகள் மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மனு மீது பதிலளிக்க மேலும் 4 வாரங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். இதையடுத்து 4 வார அவகாசத்திற்கு பின்னர் மேலும் அவகாசம் வழங்கப்படமாட்டாது என கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மூலக்கதை