இந்திய பொருளாதாரம்: அபிஜித் சந்தேகம்

தினமலர்  தினமலர்
இந்திய பொருளாதாரம்: அபிஜித் சந்தேகம்

ஸ்டாக்ஹோம்: தேவைகள் குறைந்து வருவது தான் இந்திய பொருளாதாரத்தின் மந்தநிலைக்கு காரணம் என 2019ம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற இந்தியர், அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டிற்கான வேதியியல், இயற்பியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று (அக்., 14) பொருளாதாரத்திற்கான பரிசு அறிவிக்கப்பட்டது. அப்பரிசு, அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டப்லோ, மைக்கேல் கிரமர் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதில் அபிஜித் பானர்ஜி, கோல்கட்டாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியிலும், டில்லி நேரு பல்கலைகழகத்திலும் பயின்று, பின் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்.

பொருளாதார வல்லுநரான அபிஜித் பானர்ஜி, போர்டு பவுண்டேஷன் சார்பில் செயல்படும் மசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இந்திய பொருளாதாரம் குறித்து அபிஜித் அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியதாவது:
என் பார்வையில், இந்திய பொருளாதாரம் மோசமாக சென்று கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தில் பிரச்னை உள்ளது என்பதை அரசு உணர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் இந்திய பொருளாதார வளர்ச்சிக்காக பணியாற்றுவதை விட, தற்போது என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்கிறேன்.

தேசிய மாதிரி சர்வே சார்பில் ஒவ்வொரு ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும், மக்களின் சராசரி நுகர்வு குறித்து புள்ளி விவரங்கள் வெளியிடப்படுகிறது. அதில், 2014-15 ஆண்டை விட 2017-18 ஆண்டின் சராசரி நுகர்வு குறைந்துள்ளது. இது போன்ற நுகர்வு குறைவது நீண்ட காலத்திற்கு பிறகு, நடந்துள்ளது. இதை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனாலும், எந்த புள்ளிவிவரங்கள் சரியானது என்பது குறித்து இந்தியாவில் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது.

அனைத்து புள்ளி விவரங்கள் குறித்தும் இந்திய அரசு ஒரு கணிப்பு வைத்திருக்கிறது. பிரச்னையை உணரும் வேகத்தை விட பொருளாதார மந்தநிலை வேகமாக மோசமடைந்து வருகிறது. வரவு செலவுத் திட்ட இலக்குகள் மற்றும் பண இலக்குகள் வைத்திருப்பதாக காட்டிக்கொள்வதன் மூலம் அனைவரையும் மகிழ்விப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல், பொருளாதாரத் தேவை குறித்து கவலைப்பட வேண்டும். ஏனெனில் தேவை தான் தற்போதைய பெரிய பிரச்னை என நினைக்கிறேன். தேவை குறைந்து வருவதால் தான் பொருளாதாரம் மந்தநிலை நிலவி வருகிறது. தேவையை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அபிஜித் கூறினார்.

மூலக்கதை