'ஹபீஸ் சயீதுக்கு தண்டனை குடுங்க'; பாக்.குக்கு அமெரிக்கா 'அட்வைஸ்'

தினமலர்  தினமலர்
ஹபீஸ் சயீதுக்கு தண்டனை குடுங்க; பாக்.குக்கு அமெரிக்கா அட்வைஸ்

வாஷிங்டன்: 'லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீது மற்றும் கைது செய்யப்பட்டுள்ள அதன் முக்கிய மூத்த தலைவர்கள் மீது பாக். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அமெரிக்கா கூறியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீது. இந்த 'வழக்கின் விசாரணைக்காக அவரை ஒப்படைக்க வேண்டும்' என இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே 2012ல் அமெரிக்கா ஹபீஸ் சயீதை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது. ஹபீஸ் சயீது குறித்து தகவல் அளிப்போருக்கு 70 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்றும் அறிவித்தது.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிரிவின் தலைவர் அலைஸ் வெல்ஸ் கூறியுள்ளதாவது: பாக். சமீபத்தில் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த நான்கு முக்கிய பயங்கரவாதிகளை கைது செய்துள்ளது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இந்த நால்வர் மற்றும் அந்த அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீது மீது உரிய நடவடிக்கையை பாக். எடுக்க வேண்டும். இவர்கள் தண்டிக்கப்படுவதை அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எப்.ஏ.டி.எப். எனப்படும் பண மோசடி மற்றும் பயங்கரவாத அமைப்புக்கு நிதி தடுப்பை கண்காணிக்கும் அமைப்பின் கூட்டம் விரைவில் நடக்க உள்ளது. கடந்தாண்டு ஜூனில் நடந்த கூட்டத்தில் பாக்.கை 'கிரே' நிறம் எனப்படும் மிகவும் மோசம் என்ற பட்டியலில் சேர்த்தது. வரும் கூட்டத்தில் பாக். கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படலாம் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் அமெரிக்கா இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை