மொத்த விலை பணவீக்கம் 3 ஆண்டுகளில் இல்லாத குறைவு

தினமலர்  தினமலர்
மொத்த விலை பணவீக்கம் 3 ஆண்டுகளில் இல்லாத குறைவு

புதுடில்லி:நாட்டின் மொத்த விலை பணவீக்கம், 0.33 சதவீதமாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் சரிவைக் கண்டுள்ளது.உணவுப் பொருட்கள் அல்லாத பொருட்களின் விலையில் ஏற்பட்ட சரிவால், மொத்த விலை பணவீக்கம், மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதத்தில், மொத்த விலை பணவீக்கம், 1.08 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பரில், 0.33 சதவீதமாக குறைந்துள்ளது.
உணவு பொருட்கள்அடிப்படை உலோகங்கள், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, மின்சாரம், ரசாயனப் பொருட்கள் போன்றவற்றின் விலை குறைந்திருந்தாலும், காய்கறிகள், எண்ணெய் வித்துக்கள், இறைச்சி, மீன், பால் உள்ளிட்ட பெரும்பாலான உணவுப் பொருட்களின் விலை, செப்டம்பர் மாதத்தில் அதிகரித்திருந்தது.உணவுப் பொருட்களின் பணவீக்கம், 6 சதவீதமாக செப்டம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது. இதுவே, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 5.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.அதேசமயம், உணவுப் பொருட்கள் அல்லாத பொருட்களின் பணவீக்கம், மைனஸ், 1.9 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவே, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், மைனஸ், 0.7 சதவீதமாக இருந்தது.
நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல், செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், மொத்த விலை பணவீக்கம், 1.8 சதவீதமாக குறைந்துள்ளது.இதுவே, கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில், 4.9 சதவீதமாக அதிகரித்திருந்தது.அடிப்படை பொருட்களின் பணவீக்கம், நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல், செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், 6.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.உற்பத்தி பொருட்கள்இதுவே, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், 2.7 சதவீதமாக குறைந்திருந்தது.மேலும், எரிபொருட்களின் பணவீக்கம், 15 சதவீதத்திலிருந்து மைனஸ், 1.9 சதவீதமாக குறைந்துள்ளது.தொழில் துறை உற்பத்தி பொருட்களுக்கான பணவீக்கம், நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல், செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், 0.7 சதவீதமாக சரிந்துள்ளது.
இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில், 4.1 சதவீதமாக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.சில்லரை விலை பணவீக்கம் அதிகரிப்புநாட்டின் சில்லரை விலை பணவீக்கம், செப்டம்பர் மாதத்தில், 3.99 சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்த செப்டம்பரில், காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பால், சில்லரை பணவீக்கம், 3.99 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இது, 3.28 சதவீதமாக இருந்தது. உணவுப் பொருட்களின் விலை செப்டம்பரில், 5.11 சதவீதமாக அதிகரித்துள்ளது. காய்கறிகளின் பணவீக்கம், 15.40 சதவீதம் அதிகரித்துள்ளது. சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்திருப்பினும், அது ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள இலக்கான, 4 சதவீதத்திற்குள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை