கிரிக்கெட் வாரிய தலைவராக கங்குலி போட்டியின்றி தேர்வு

தினகரன்  தினகரன்
கிரிக்கெட் வாரிய தலைவராக கங்குலி போட்டியின்றி தேர்வு

மும்பை : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் சூதாட்டம் உட்பட பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததன் காரணமாக பிசிசிஐ செயல்பாட்டை கண்காணிக்க நிவாகிகள் குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் நியமித்தது. லோதா கமிட்டி பரிந்துரைகளின் அடிப்படையில் நிவாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கான நிர்வாகிகள் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.இந்த நிலையில், பிசிசிஐ நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. தலைவர் பதவிக்கு இந்திய அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மனு தாக்கல் செய்த நிலையில், வேறு யாரும் போட்டியிட முன்வரவில்லை. இதைத் தொடர்ந்து கங்குலி ஒருமனதாக தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது. பிசிசிஐ வருடாந்திர பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. அதில் புதிய நிர்வாகிகள் தேர்வு பற்றி முறைப்படி அறிவிக்கப்பட்டு பொறுப்பேற்க உள்ளனர்.

மூலக்கதை