துருக்கி மீது பொருளாதார தடை: டிரம்ப் அதிரடி

தினமலர்  தினமலர்
துருக்கி மீது பொருளாதார தடை: டிரம்ப் அதிரடி

வாஷிங்டன்: சிரியாவின் குர்தீஷ் படைகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக, துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அந்நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க தயாராக உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.

தாக்குதல்


சிரியாவின் வடக்குப் பகுதியில் அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து அங்கு குர்தீஷ் படையினர் மீது துருக்கி போர் தொடுத்துள்ளது. குர்தீஷ் படையினர் கட்டுப்பாட்டில் இருந்தது ரக்கா நகருக்கு அருகே உள்ள அய்ன் இஸ்ஸா என்ற இடத்தில் ஏராளமான ஐஎஸ் பயங்கரவாதிகள் சிறைவைக்கப்பட்டிருந்தனர். அந்த பகுதியில் துருக்கியின் தாக்குதலைத் தொடர்ந்து இந்த முகாமில் இருந்த ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்த ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என 800க்கும் மேற்பட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள் தப்பிச் சென்று விட்டதாக குர்தீஷ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தடை


இந்நிலையில், துருக்கியின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாடு மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

எச்சரிக்கை


இது குறித்து டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், துருக்கி தலைவர்கள் தொடர்ந்து அழிவு மற்றும் ஆபத்தான வழியை தேர்வு செய்தால், அந்நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க முழுமையாக தயாராக உள்ளேன். அமெரிக்கா - துருக்கி இடையே நடக்கும், 100 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட வர்த்தக பேச்சுவார்த்தையை நிறுத்தி வைத்துள்ளேன். தொடர் மனித உரிமை மீறலில் ஈடுபடுபவர்கள், அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துபவர்கள் மீது கூடுதல் தடை விதிக்கப்படுகிறது எனக்கூறியுள்ளார். துருக்கி மீது தடை விதிக்கப்படுவது குறித்து அமெரிக்க பிரதிநிதித்துவ சபை தலைவர் நான்சி பெலோசிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், துருக்கி விவகாரம், தேசிய அவசர நிலை என தெரிவித்துள்ளார்.

குற்றம்


அமெரிக்க கருவூலத்துறை கூறுகையில், துருக்கி பாதுகாப்பு, உள்துறை மற்றும் எரிசக்தி துறை அமைச்சர்களுக்கு எதிராக தடை விதிப்பதாகவும், அவர்களுக்கு, அமெரிக்காவில் உள்ள சொத்துகளை முடக்கி வைப்பதாகவும், அவர்களுடன் நிதி பரிமாற்றம் செய்வது குற்றம் எனக்கூறியுள்ளார்

வலியுறுத்தல்


துணை அதிபர் மைக் பென்ஸ் கூறுகையில், அதிபர் டிரம்ப், துருக்கி எதிபர் எர்டோகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அத்துமீறி தாக்குதல் நடத்துவதை நிறுத்திவிட்டு, சிரியாவில் உள்ள குர்தீஷ் படைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தினார்.. இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் கூறுகையில், அடுத்த வாரம், பெல்ஜியத்தில் உள்ள புருஸ்சல்ஸ் நகர் சென்று, துருக்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேடோ அமைப்பை வலியுறுத்த உள்ளதாக தெரிவித்தார்.

மூலக்கதை