குளம் துார் வாரும் பணியில் தன்னார்வ அமைப்பு ஆர்வம்: சுத்தமாகப்போகிறது திருவொற்றியூர் குளம்

தினமலர்  தினமலர்
குளம் துார் வாரும் பணியில் தன்னார்வ அமைப்பு ஆர்வம்: சுத்தமாகப்போகிறது திருவொற்றியூர் குளம்

திருவொற்றியூர்:பராமரிப்பில்லாமல் இருந்த குளத்தை துார் வாரும் பணியில், தன்னார்வ அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

திருவொற்றியூர் மேற்கு, ஜோதி நகர், நான்காவது தெருவில், 1.47 ஏக்கர் பரப்பில் குளம் ஒன்று இருந்தது. தற்போது, மணல் மேடுகள் எழும்பி, குளம் இருந்த தடம் தெரியாமல் போனது.குளத்தை சுற்றி, தனியார் நிறுவனத்தின் சுற்றுச்சுவர் உள்ளதால், குளம், மைதானம் போல் காட்சியளிக்கிறது. சென்னை பசுமை இயக்கத்தைச் சேர்ந்தோர், குளத்திற்கான ஆதாரங்களை திரட்டி, குளத்தை துார் வார முடிவு செய்தனர்.

தொடர்ந்து, சென்னை பசுமை இயக்கம், பன்னாட்டு லயன் சங்கம் மற்றும் சென்னை மாநகராட்சியுடன் சேர்ந்து, குளத்தை துார் வாரும் பணி, நேற்று காலை துவங்கியது.அதற்கான பூமிபூஜையில், தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள், துரைராஜ், குரு சுப்ரமணி, மாநகராட்சி வடக்கு வட்டார மேற்பார்வை பொறியாளர் ஜெயராமன், திருவொற்றியூர் மண்டல உதவி கமிஷனர் முருகன், ஜோதி நகர், ராமநாதபுரம் நகர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முதல்கட்டமாக, 10 லட்சம் ரூபாய் செலவில், குளத்தை ஆழப்படுத்தி, 10 அடிக்கு கரைகள் அமைக்கும் பணி நடக்கவுள்ளது. குளத்தை ஆழப்படுத்தும் பணியில் எடுக்கப்படும் மண், கரை அமைக்க பயன்படுத்தபட உள்ளது.கரைகளில், நடைபயிற்சி தளம் அமைத்தல், சிறுவர் பூங்கா, காரிய மேடை என, பல திட்டமிடல் உள்ளதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை