உரிய விவரங்கள் தருவதற்கு தயக்கம் என்ன? அங்கன்வாடி பணியாளர் கவலை

தினமலர்  தினமலர்
உரிய விவரங்கள் தருவதற்கு தயக்கம் என்ன? அங்கன்வாடி பணியாளர் கவலை

திருப்பூர்:ஆதார் எண் உட்பட விவரத்தை தர மறுப்பதால், 'போஷான் அபியான்' திட்ட கணக்கெடுப்பு நடத்த முடியாமல், அங்கன்வாடி பணியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.மத்திய அரசின் போஷான் அபியான் திட்டத்தில், தமிழகத்தில் உள்ள, அனைத்து மாவட்டங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை கண்டறிந்து, ஆரோக்யத்தை மேம்படுத்தும் திட்டம் வகுக்கப்பட உள்ளது.அங்கன்வாடி பணியாளர்கள் மூலமாக, 'போஷான் அபியான்' திட்ட கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பணியாளருக்கு, 'ஸ்மார்ட்' மொபைல் போன் வழங்கப்பட்டு, அதன்மூலமாக கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
அங்கன்வாடி மைய எல்லையில் உள்ள, அனைத்து வீடுகளின் விவரத்தையும், போன் மூலமாக, நேரடியாக இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கணக்கெடுக்க செல்லும் பணியாளரிடம், ஆதார் போன்ற விவரங்களை கூறாமல், பொதுமக்கள் திருப்பி அனுப்புகின்றனர்.இதனால், கணக்கெடுப்பு நடத்த முடியாமல், அங்கன்வாடி பணியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம், இத்திட்டம் குறித்தும், கணக்கெடுப்புக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.அங்கன்வாடி பணியாளர்கள் கூறுகையில், 'அரசின் உத்தரவுப்படி, வீடு வீடாக கணக்கெடுப்பு எடுக்க செல்கிறோம். ஆனால், ஆதார் உட்பட விவரங்களை கேட்டால், 'உங்களுக்கு எதற்கு சொல்ல வேண்டும்,' என்று சிலர் கூறுகின்றனர்.
மேலும், உரிய விவரங்களையும் கூற மறுக்கின்றனர். மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல், கணக்கெடுப்பதில், சிரமங்கள் உள்ளன,' என்றனர்.இதுகுறித்து கலெக்டர் விஜய கார்த்திகேயனிடம் கேட்டபோது,''போஷான் அபியான் திட்டத்தை செயல்படுத்த, மக்களிடையே சில விவரங்கள் பெறப்படுகிறது.அங்கன்வாடி பணியாளர் வீட்டுக்கு வரும் போது, ஆதார் உள்ளிட்ட விவரங்களை தயக்கமின்றி அளிக்கலாம் என, மக்களுக்கு அறிவுறுத்தப்படும்,'' என்றார்.

மூலக்கதை