ஒரே மாதிரி இருந்தால் சரி! ரேஷன் கடை ஊழியருக்கு போனஸ்:கூட்டுறவுத்துறை வைக்குமா மனசு

தினமலர்  தினமலர்
ஒரே மாதிரி இருந்தால் சரி! ரேஷன் கடை ஊழியருக்கு போனஸ்:கூட்டுறவுத்துறை வைக்குமா மனசு

கோவை:ரேஷன் கடை பணியாளர்களுக்கு, தீபாவளி போனஸ் வழங்குவதில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. அவற்றை களைந்து அனைவருக்கும், ஒரே மாதிரி போனஸ் வழங்க வேண்டும் என, பணியாளர்கள் வலியுறுத்திஉள்ளனர்.
கோவை மாவட்டத்தில், 1,403 ரேஷன் கடைகள் உள்ளன. மகளிரால் இயக்கப்படும் கடைகள், 71, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தால் இயக்கப்படும் கடைகள், 65, பல்வேறு கூட்டுறவு சங்கங்களின் கீழ் நடத்தப்படும் கடைகள், 1,250, இதர சங்கங்களின் கீழ் இயங்கும் கடைகள், 17. இதில், ஆயிரத்து 400 விற்பனையாளர்களும், 520 அளவையர்களும் பணிபுரிகின்றனர்.
ரேஷன்கடைகள் அனைத்தும், கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படுவதால், அனைத்து கடைகளுக்கும், தீபாவளி போனஸ் வழங்குவதற்கு கூட்டுறவுத்துறை முடிவு செய்து, பட்டியல் தயாரித்துள்ளது.
அதன்படி, வளமான, அதிக வருவாய் ஈட்டும், கூட்டுறவு சொசைட்டிகளின் கீழ் செயல்படும், ரேஷன்கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, 21 சதவீதம் (குறைந்த பட்சம், 20,000 ரூபாய் முதல் 22,000 ரூபாய் வரை), நஷ்டம் ஏற்பட்ட கூட்டுறவு சங்கங்களின் கீழ் இயங்கும் ரேஷன்கடை பணியாளர்களுக்கு, 8.33 சதவீதம், (8,000 ரூபாய் முதல் 9,500 ரூபாய் வரை), நலிவடைந்த கூட்டுறவு சங்கங்களின் கீழ் இயங்கும் ரேஷன்கடைகளுக்கு, கருணைத் தொகையாக, 1,200 முதல் 2,400 ரூபாய் வரை போனஸ் வழங்க, கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது. கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும், அனைத்து ரேஷன்கடைகளுக்கும், லாபத்தின் அடிப்படையில், ஒரே மாதிரி, 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று, ரேஷன்கடை பணியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து, தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ''கூட்டுறவு சட்டவிதி 97ல் திருத்தம் மேற்கொண்டு, அனைத்து பணியாளர்களுக்கும் ஒரே மாதிரி போனஸ் வழங்க வேண்டும்,'' என்றார்.இது குறித்து கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் பழனிச்சாமியை போனில் தொடர்பு கொள்ள, பல முறை முயற்சித்தும், தொடர்பு கொள்ள முடியவில்லை.
நல்ல ஐடியா இது!
ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் ஒருவர் கூறுகையில், 'கூட்டுறவுத்துறை பல்வேறு வர்த்தகங்களில், தடம் பதித்து வருகிறது. பொதுவினியோகத்திட்டத்தில் பெரிய அளவில் லாபம் இல்லாவிட்டாலும், மக்கள் சேவைக்காக அப்பணியை செய்து வருகிறது. அதில் அந்தந்த சங்கங்கள் லாபம் ஈட்டினால் தான், அதன் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு, போனஸ் வழங்க முடியும்.லாபம் இல்லாத சங்கத்துக்கான போனஸ் தொகையை, மற்ற சங்கத்திலிருந்து எடுக்க முடியாது. கூட்டுறவுத்துறையிலுள்ள, உபரி தொகையிலிருந்து எடுத்து வழங்கலாமா என்பது குறித்து அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும்' என்றார்.

மூலக்கதை